Tuesday, 9 February 2016

இரண்டு கவிதைகள்

கவிதை ஒன்று
   மஹா சிற்பிகள் உலாவும்
   இந்தத் தெருவில்
   என்னிடம் இருப்பது
   ஒரு மீனிற்கு உயிர்ப்பிச்சை இடும்
    பெரு மந்திரம்
     உண்மையில் நீங்கள் சொல்வது போல
  சிலை வடிக்கும் ஆயுதங்களற்ற
   ஒன்றுமற்றவனே
    கிழக்குத் திசையில் பயணிக்கிறேன்                                                         எனக்காக காத்திருக்கும்
சபிக்கப்பட்ட மீன்கடலுக்கென
******          *****        *****    ****
கவிதை இரண்டு

மார்கழியிலிருந்து விடுபட்டவளின்
கனவொன்று
விலங்குகளின் இசைக்குறிப்பில்
லயித்திருப்பவனின் வாசலில்
தவமாய் கிடக்கிறது
இனி அவளின் உலகில்
தேவனைக் கண்டதாக
பறை சாற்றுவாள்
பிறகொரு நாள்
தெருமுனையில்
பைத்தியங்களுக்கான இசை கோர்ப்பவளாக
உருவாகியிருப்பாள்
இந்தக் கவிதை
அவளின் விரல்பற்றிக் கொள்கையில்
கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்கும்
***********   ******    *****

   

No comments:

Post a Comment