கவிதையால் இந்த வாழ்வு உயிர்த்திருக்கிறது.யாவும் கவிதையாகவே கனன்று கொண்டிருக்கிறது.
இந்தக் கனலை அணையவிடாமல் எங்கெங்கு காணினும் கவிதையடா என்று உரத்துச் சொல்ல வழிகாட்டும் சுடராக இந்த விருது என்னைக் கௌரவிக்கிறது.
என்னையும் என் கவிதைகளையும் எப்போதும் மலர்ச்சியோடு வைத்திருக்க இடைவிடாமல் கவனம் செலுத்தும் என் அருமை புன்னகை செ ரமேஷ் ,நீண்ட கவிதைப் பயணத்தில் என்னோடு சேர்ந்து பயணிக்கும் கவிதைப் பயணிகளாக பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலர் திரு பூபாலன்,கொலுசு மின்னிதழின் வழியே பலரையும் எழுதத் தூண்டியபடி இருக்கும் அருமை நண்பர் திரு அறவொளி அவர்கள்,பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் ஆலோசகர் நண்பர் ஆன்மன்,இலக்கிய நண்பர்கள் இலக்கியன் விவேக்,அனாமிகா,எனது பயணத்தில் நீண்ட தூரம் துணையாக வரப் போகிற புன்னகை ஜெயக்குமார்,சோலை மாயவன்,மற்றும் கோவை இலக்கிய சந்திப்பு நண்பர்கள் இளஞ்சேரல், இன்னுமான நண்பர்கள் யாவருக்கும் என் கவிதை நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சிகள் என்றால் மன ஆரோக்கியத்திற்கு கவிதை என்று விருதுக்கு என்னை தேர்வு செய்த ஜெயவர்மம் அறக்கட்டளைக்கு நன்றி
இன்று நூல் வெளியிட்ட அகிலா அவர்களுக்கு வாழ்த்துகள்
** கவிதை உயிர்ப்பின் வரம்
**கவிதை எப்போதும் உயிர்ப்பின் பாதை
கவிதையால் உயிர்ப்போம்
###21-02-2016 அன்று கோவையில் ஜெயவர்மம் அறக்கட்டளை விருது வழங்கி கௌரவித்த போது பகிர்ந்து கொள்ளவென்று தயாரான பத்தி.அங்கு வாய்ப்பு அமையாததால் இங்கு பகிர்வு
***********************************
Sunday, 21 February 2016
வாசிக்காத ஏற்புரை
Tuesday, 9 February 2016
இரண்டு கவிதைகள்
கவிதை ஒன்று
மஹா சிற்பிகள் உலாவும்
இந்தத் தெருவில்
என்னிடம் இருப்பது
ஒரு மீனிற்கு உயிர்ப்பிச்சை இடும்
பெரு மந்திரம்
உண்மையில் நீங்கள் சொல்வது போல
சிலை வடிக்கும் ஆயுதங்களற்ற
ஒன்றுமற்றவனே
கிழக்குத் திசையில் பயணிக்கிறேன் எனக்காக காத்திருக்கும்
சபிக்கப்பட்ட மீன்கடலுக்கென
****** ***** ***** ****
கவிதை இரண்டு
மார்கழியிலிருந்து விடுபட்டவளின்
கனவொன்று
விலங்குகளின் இசைக்குறிப்பில்
லயித்திருப்பவனின் வாசலில்
தவமாய் கிடக்கிறது
இனி அவளின் உலகில்
தேவனைக் கண்டதாக
பறை சாற்றுவாள்
பிறகொரு நாள்
தெருமுனையில்
பைத்தியங்களுக்கான இசை கோர்ப்பவளாக
உருவாகியிருப்பாள்
இந்தக் கவிதை
அவளின் விரல்பற்றிக் கொள்கையில்
கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்கும்
*********** ****** *****
Monday, 8 February 2016
இரண்டு கவிதைகள்
கவிதை ஒன்று
பஞ்சு ஒட்டியிருக்கும் தலையோடு
எப்போதும் ஒரு கனவை
மிச்சம் வைத்திருக்கிறாள் அருக்காணி
அம்மா சொல்லிக் கொள்கிறாள்
ஜாதகம் எதுவும் கூடி வரவில்லையென்று
இப்போது அவளை
யாரும் பின்தொடர்வதில்லை
எந்தக் கடிதமும்
சலனப்படுத்துவதில்லை
எம்பிள்ளையைப் போல உண்டா என்று
பெருமையாகும் அப்பாவின்
கர்வத்திற்குப் பின்னால்
கரைந்திருக்கிறது
அவள் கொண்ட காதலும்
அவள் மீது கொண்ட காதலும்
*************************************** ****கவிதை இரண்டு******
நனறாக சமைப்பாள்
அவள் வெளுத்தால்தான்
துணி பளிச்சிடும்
வீடு வெள்ளையடிக்க
இவள்தான் அருமை
ஏகப்பட்ட பெருமைகளுக்கு அடியில்
முனகிக் கொண்டிருக்கிறது
ஒரு ராஜகுமாரனைப் பற்றிய கனவு
*****************************&&&&*
சிறுவர் கதை
***போராட்டம்****
#############
சிங்கங்கள் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தன.
ஏதோ ஒரு சலசலப்பு .
சிங்கக் கூட்டத்திலிருந்து,ராஜா சிங்கம் சற்று தள்ளி நின்று எட்டிப் பார்த்தது
தூரத்தில் ஏதோ கூட்டம்.
தன் உதவியாளரை அழைத்து,அது என்னவென்று பார்த்து வரச் சொன்னது.
கம்பீராய் நடந்தது.
வேகமாகத் திரும்பி வந்தது.
" ராஜா ,,,நம்ம முயல்வெளிலதான் பிரச்சனை...யாரோ மனுசங்களாம் ...அந்தப் பகுதியை சுத்தம் செய்து ஏதோ செய்றாங்களாம்...போக மாட்டேன்னு அடம் பிடிக்குதுங்க முயல் கூட்டம்..."
அப்போது கூட்டமாக ஏதோ சலசலப்பு..
சிங்கங்கள் எட்டிப் பார்த்தன.
முயல்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தன...
"அண்ணே...அண்ணே...ஒரு உதவி வேணும்...காலங்காலமா இந்தக் காட்டிலதான் இருக்கோம்...இப்ப விரட்டறாங்க...நாங்க இதை எதிர்த்துப் போராடப் போறோம்...நாங்க போராடும் போது நீங்களும் ஆதரவு தரணும்..."
வாய் விட்டு சிரித்தது சிங்கம்.
காடே அதிர்ந்தது.
"உங்களுக்கொரு ஆபத்துன்னா...நீங்கதான் பார்த்துக்கணும்...போங்க,...போங்க...எனக்கு நிறைய வேலை இருக்கு..."
சிங்கங்கள் அடித்து விரட்ட சோர்வாக திரும்பின முயல்கள்
"நம்ப யானை அண்ணன்கிட்டே உதவி கேட்போம் ...கண்டிப்பா செய்வாரு... "
முயல்களில் ஒன்று ஆலோசனை கூறியது
எல்லாரும் யானைக்கூட்டத்தை அடைந்தனர்
" ஏது ,,,இவ்வளவு தூரம்,அதுவும் கூட்டமா வந்திருக்கீங்க..."
யானை அண்ணன் விசாரித்தார்.
வந்த விபரத்தை விபரமாகக் கூறியது முயல் ராஜா
சற்று நேரம் யானை யோசித்தது.
"முயல் தம்பி உங்களுக்கு உதவணும்னு தோணுது...அதுல சின்ன சிக்கல் இருக்கு...இந்த அதிகாரம் புடிச்ச மனுசங்கள எதிர்த்தா எங்களுக்கும் ஆபத்துதான்...இது உங்க பிரச்சனை...நீங்களே பாத்துக்கங்க..."
யானையிடமும் தோல்வியே கிடைக்க இனி என்ன செய்வதென்று குழப்பமாக இருந்தது.
"நம்ம பிரச்சனை...நாமே பார்த்துக்கலாம்...போராடத் துணிச்சல் இருக்கும் வரை போராடுவோம்..."
கூட்டத்தில் ஒரு முயல் கம்பீரமாக முழங்கியது.
அப்போது எதிரில் நரி வந்து கொண்டிருந்தது.
"முயலுகளே...என்ன மாநாடு கீநாடு போடப்போறீங்களா...கூட்டமாக வர்றீங்க..."
முயல்கள் எதுவும் பேசாமல் நகர்ந்தன.
"என்னை நம்ப மாட்டீங்கன்னு தெரியும்...காலங்காலமா எங்களை சூழ்ச்சிகாரங்கன்னே முடிவு செய்துட்டாங்க...நான் உங்களுக்கு உதவ முடியும்...நம்புங்க..."
"இழக்கிறவங்களுக்கு யாரை நம்பறதுன்னு குழப்பம் வரும்...நீ என்ன உதவி செய்வே,,,,"
" நாட்டிலதான் மனுசங்க வித்தியாசமா நடந்துக்கிறாங்க...விவசாயிக்கு பிரச்சனை வந்தா அவன்தான் போராடனும்...வாத்தியாருக்கு ஒரு பிரச்சனைன்னா வாத்தியார்தான் போராடனும்...நாம அப்படி வேண்டாம்...இது முயலோட பிரச்சனை இல்லே ...காட்டோட பிரச்சனை...மற்ற விலங்குகளுக்கு எடுத்துச் சொல்வோம்...வாங்க தைரியமா நிற்கலாம்..."
நரியின் வேகத்தோடு முயல்கள் பின் தொடர்ந்தன.
#####******######*******#####***
Sunday, 7 February 2016
சிறுவர் கதை
அலைகள் அலைந்து கொண்டிருக்கும் குளம்.மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தன குஞ்சு மீன்கள் .
"அக்கா ...அக்கா ...அம்மா எங்கேயோ போயிட்டாங்க...அம்மா வரதுக்குள்ள நாம கரையோரம் போயிட்டு வரலாம்..."
தன் அக்காவிடம் கொஞ்லாக கேட்டது தங்கை மீன்.
"வேண்டாம்பா...அம்மா வந்த பிறகு எங்க வேணுனாலும் போகலாம்..தனியா எங்கேயும் போக வேண்டாம்.."
"நீ எப்பவும் இப்படித்தான்...நான் கரைக்குப் போய் வேடிக்கை பார்த்துட்டு வரேன் "
அக்காவின் பேச்சை புறம் தள்ளி விட்டு துள்ளிக் கொண்டு ஓடியது.
கரையோரமாக இருந்த பலா மரங்கள்,தென்னை மரங்கள் ஆகியவற்றை எட்டி எட்டிப் பார்த்து ரசிப்பதும் தண்ணீருக்குள் மூழ்குவதுமாக இருந்தது.
தென்னை மரத்தில் ஓடி விளையாடுகிற அணிலைத்தான் ரொம்பப் பிடிக்கும்.கரைக்குச் சென்று அணிலோடு விளையாடலாம் .ஆனால் அம்மா சொல்லி இருக்கிறாள்.கரைக்குப் போனால் உயிர் போய்விடும்
தண்ணீருக்குள் நிலா மிதந்து கொண்டிருந்தது.
அதன் மீது எட்டிக் குதித்து எட்டிக் குதித்து விளையாடியது
"அடடா சூப்பர்...என்ன டைவ்...பார்க்கவே ஆச்சரியமா இருக்கு..."
சுற்றும் முற்றும் பார்த்தது.யாரையும் காணவில்லை.
"நான்தான் பாராட்டினேன் ..."
குரல் வந்த திசையைப் பார்த்தது .புதிய உருவம் ஒன்று நின்றிருந்தது.
அட நம்மை விட பெரிசா இருக்கே...ஆச்சரியமாக இருந்தது.
"நான் பக்கத்து குளத்திலிருந்து வரேன் ...நீ ரொம்ப அழகா இருக்கே..."
அந்த உருவத்தின் புகழ்ச்சி புல்லரித்தது.
"நாளைக்கும் வருவியா .."
உருவம் கேட்டது
வருவேன் என்று பதில் சொன்னது
அன்று அம்மாவிடம் இதைச் சொல்லாமல் மறைத்து விட்டது
இரண்டு,மூன்று நாட்களாக பழகியதில் நண்பர்களாகி விட்டார்கள்.
"நீ நாளைக்கு உங்க அம்மா அப்பா அக்கா தங்கை எல்லாரையும் அழைத்துக் கொண்டு வா ...எல்லாரும் சந்திப்போம் என்றது உருவம்.தானும் பெற்றோரை அழைத்து வருவதாக கூறியது.
அன்று தான் கரையில் சந்தித்த உருவத்தைப் பற்றி அம்மாவிடம் கூறியது.
"வேண்டாம்...நமது இடத்திலேயே இருப்போம்.." மறுத்தது
"நம்மை யாராவது புகழ்ந்தா அது தகுதியானதாக இருக்கணும் ...நீ சொல்வதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை...யாரோ நம்மைப் பிடிக்க சதி செய்கிறார்கள்..."
அம்மா மீன் தெளிவாகச் சொன்னது
குஞ்சு மீனுக்கு கோபம் வந்து விட்டது.வருவதாக வாக்கு கொடுத்து விட்டேன்...கண்டிப்பாக போகனும்.,'
பிடிவாதம் வென்றது.கரையை நோக்கி போனார்கள்.
"அம்மா...அதோ பாருங்கள் ...அவர்கள்தான் நண்பனின் உறவினர்கள் ...கூட நின்றிருப்பதுதான் என் நண்பன் என்றது.
மனம் திக்கென்றது...குழந்தாய்..கொஞ்சம் நில்லுங்க ...இவர்கள் நம் எதிரிகள் ...நம்மை ஒட்டு மொத்தமாக சாப்பிடவே இப்படி சதி செய்திருக்கிறார்கள்...இவர்கள்தான் கொக்குகள் ...புகழுக்கு மயங்கி எங்களையும் ஆபத்தில் சிக்க வைத்து விட்டாய்..இந்த அம்மா சொல்வதில் நம்பிக்கை இருந்தால் வீடு திரும்புங்கள்.,,,புகழ் வேண்டுமானால் கரைக்குப் போகலாம்.ஆனால் யாரும் உயிரோடு திரும்ப மாட்டோம்..தகுதி உள்ளவர்கள் புகழ்ந்தால்தான்
பெருமை.புகழ்ந்து பேசினால் மட்டும் நண்பர்களாக முடியாது.
இனி நீங்கள் முடிவெடுங்கள்.நான் காத்திருக்கிறேன்.########******
###########################
Friday, 5 February 2016
சிறுவர் கதை
*******சிறுவர் கதை ****
*****************சொல்பேச்சு*****
காலையில் கண் விழித்துக் கொண்ட புறாக்கூட்டம் தங்களுக்கான இரையைத் தேடிப் புறப்பட்டன.
வழக்கமான பாதையில் பறந்து கொண்டிருந்தன.
"அம்மா ...இவ்வளவு தூரம் வந்து விட்டோம்...ஒரு பிடி உணவைக் காணவில்லையே..."
குஞ்சுப் பறவை கவலையோடு கேட்டது .பசி மயக்கம் கண்ணிலும்,குரலிலும் தவிப்பாய் இருந்தது.
"ஆம் குழந்தையே...கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் நடக்கிறது...புழுக்கள் இல்லாத மண் வயல்கள்..வெறும் கட்டடங்கள்.,.இவைகள்தான் உள்ளன...என்ன செய்வது தேடலைத் துவங்குவோம்..."
தாய்ப்பறவை ஆறுதல் கூறியது.தனக்கும் பசிதான் என்று வெளிப்படையாக கூற முடியவில்லை...
இப்போதெல்லாம் இரையே கிடைப்பதில்லை.
தன் பறத்தலை இன்னும் கூடுதலாக வேகப்படுத்தியது.
ஒவ்வொரு வாசலாக தன் பார்வையைச் செலுத்தியது.
பிறகு வயல்வெளிகள் தென்படுகின்றதா என்று பார்த்தபடி பறந்து கொண்டிருந்தது.ஏமாற்றம்தான் மிஞ்சியது
" அம்மா...அம்மா.,"
ஆர்வத்தோடு தன்னை அழைத்த குஞ்சுப் பறவையைப் பார்த்தது.
"அதோ பாருங்கள் ஒரு வீட்டு வாசலில் தானியங்கள் தெரிகின்றன.நாம் அதைச் சாப்பிட்டுப் பசியாறலாம்...இறங்கலாம் அம்மா "
"நானும் பார்த்தேன் ...அருகில் எங்காவது வயல்வெளி இருக்கும் ..அங்கேயே தேடலாம்..'
"இல்லை..அம்மா...இப்போது மிகவும் பசியாக இருக்கிறது.கிடைப்பதை விட முடியுமா..நான் இறங்குகிறேன் "
"இங்கு இப்படி ஒருவன் நமக்காக காத்திருப்பதில்லை...எனக்கு சந்தேகமாக உள்ளது...பொறுப்போம்"
தாய்ப்பறவையின் சொல்லைக் கேட்கத் தயாராக இல்லை.தரையில் இறங்கியது.
வாசலில் பரவலாகக் கிடந்த தானியங்களைக் சுவைக்கத் துவங்கியது.
" இல்லை குழந்தை ஆபத்து காத்திருக்கிறது..உடனே மேலே வா என்று எச்சரித்தது
பசி அறிவை மறைத்தது
சட்டென்று தன்னை வளைத்த வலையில் சிக்கிக் கொண்டது
வலியில் கதறியது
"கவலைப்படாதே ...உன்னை வளர்ப்பதற்காகத்தான் பிடித்துள்ளேன். தினமும் உனக்கு தேவையான யாவும் தருவேன்..."
வீட்டுக்காரனின் பேச்சில் சமாதானமாகி விட்டது குஞ்சுப்பறவை
இப்படித்தான் காலங்காலமாக இந்த மனிதர்கள் பிறர் பசியைப் பயன்படுத்தி தனக்கான அடிமைகளைத் தேர்வு செய்கிறார்கள்
தனக்குத் தானே புலம்பத் துவங்கியது தாய்ப்பறவை
Thursday, 4 February 2016
இன்றிரவை உன் திசைநோக்கி
இன்றிரவை
உன் பாதை வழியாக அனுப்புகிறேன்
செல்லும் வழியில் தேவதைகளின்
துயரங்கள் வழிமறித்து
விடுதலைக்கான மந்திரத்தை
இறைஞ்சுகின்றன
இரவோ
என்னை வேண்டுமாறு கெஞ்சுகிறது
யாரின் காலடியோ நெஞ்சதிர
இப்போது எதிர்கொள்கிறது
என்னிடமே திரும்பிவிட்ட
இரவை
வேறு வழியற்று உணவாக்குகிறேன்