Sunday, 25 December 2016

கவிதை பத்து

பத்து கவிதைகள்
*****"""""**********
கவிதை ஒன்று

இவ்வளவு நாள் அடையாளமறியாத
ஒருவன்தான் இன்று
பெரும் ஆர்ப்பாட்டமாகிறான்
போகிற போக்கில்
நள்ளிரவானாலும்
மலர்ந்துதான் ஆக வேண்டுமென
அதிகாரமாகிறான்
பூதான் சட்டென்று பூ நாகமானேன்

####
கவிதை இரண்டு

கதவை பிராண்டியது நீதானென
சொல்ல வக்கற்ற இரவில்
பெய்த பனியை
மழையென நிரூபிக்க
ஓவ்வொரு துளியாய்
மேகமாக்கினேன்
என் உதிரம் கொண்டு-
பசி தீர்ந்து திரும்புகிறாய்
தூரத்தில் ஊளையிடுகிறது
இருவரின் நரிகள்

####

கவிதை மூன்று
++++

யாரையும் தெரியாத ஊரில்
கடந்து போகும் யாவரும்
யாரோ ஒருவரின் சாயலில்
நெருக்கமாகிறார்கள்
நெருக்கமானவர்களின் மந்தையில்
இப்போதும் தடுமாற்றம்
வழி தவறிய ஆட்டுக்குட்டியாக

+++++

கவிதை நான்கு

++++++

வெகு காலமொன்றும் கடந்திடவில்லை
அடையாளமாக எதையெல்லாமோ
அடுக்கிக் கொண்டிருப்பவரின் முகத்தில்
கைவிடப்பட்டவரின்
பெருந்துயரமிருந்தது
ஒவ்வொரு தெருவிலும்
இப்படியொன்று அலைவதாக
சலித்த புகார் ஒன்றை
ஒப்பிக்கிறான்
சாமக் கோடாங்கி
+++++
கவிதை ஐந்து
+++++
நீங்களும் நிலா பார்க்கிறீர்கள்
நானும் பார்க்கிறேன்
நம்மைப் போல ஒருவன்
சூரியன் என்கிறான்
வேறு வழியற்ற நாம்
ஆமென்று ஏற்கும் நாளாகிறது
விதி வசமாக

கவிதை ஆறு
******
பெருகியோடும் உபசரிப்பு நதியில்
துள்ளும் மீனாகக்கிடக்கிறேன்

*****
கவிதை ஏழு
*****

பூனைகளை மேய்க்குமொருவனை
சந்திக்கும் போது
எலிகளைப் பற்றிப் பாடினேன்
பூனை மேய்ப்பென்பதறியாமல்
பகலில் எலியாகவும்
இரவில் பூனையாகவும் வாழும்படி
சபித்துப்போகிறான்
*****
கவிதை எட்டு
****
மூடப்பட்ட பாதையொன்றில்
கனவைத் திறப்பவர்கள் வருகிறார்கள்
சாயமிழந்த  வண்ணத்துப்பூச்சியொன்று
அலைகிறது அங்கும் இங்கும்
பிறகது அமர்கிறது

****

கவிதை ஒன்பது
****
ஆளரவமற்ற நெடுஞ்சாலையில்
குருதி ஒழுகக் கிடக்கிறது
நள்ளிரவு வரை அழுதபடி இருக்கும்
கனவொன்று
ஒவ்வொரு வாகனத்தின் பின்னும்
ஓடியோடி
சொல்லத் தவிக்கும்
அதன் சொற்களில் ஒன்றிரண்டு
உறங்காதவனின் கவிதைகளில்
தேம்பிக்கிடக்கிறது

****
கவிதை பத்து
***
அலைபேசியின் குரலில்
ஒரு பூவை மலர்த்துகிற பேரின்பம்
வாய்க்கிறது
இத்தனை குரல்களின் பெருங்கூட்டத்தில் ஒரு குரலுக்கு
துர்அதிர்ஷ்டவசமாக
அது ஒரு
தவறிய அழைப்பாகிவிடுகிறது

****

Sunday, 27 November 2016

கவிதை

அமர்ந்திருந்தவனின் இருபுறமும்
அழகுக்கென வைத்திருந்த
தொட்டிப்பூச்செடிகளில் இருந்தது
இதுவரை அறியாத வண்ணங்கள்
அது ஏன் உன்னை நினைவுபடுத்த வேண்டுமென
அறிய முடியவில்லை
இந்த முறை அச்செடிகளோடு
இணைந்தாயென்பதைத் தவிர
வேறொன்றும் இருக்கக்கூடும்தான்
அதை இன்னொரு கவிதை
அறியத்தரக்கூடும்

Friday, 4 November 2016

கசப்பு பத்து

கசப்பு பத்து
*****
ஒவ்வொரு முறையும்
தொண்டைக்குழியோடுதான் இருத்துகிறேன்
மிக லாவகமாக நீ எனக்களிக்கும்
நஞ்சை
நீ அமிர்தவர்சினியாகவே
ஊரெல்லாம் அடையாளமாகிறாய்

*****
அப்பெரும் துயரமொன்று
சுற்றி வளைக்கிறது
சற்று நேரத்திற்கு முன்
ஒரு கையள்ளி இனிப்பைப்
பரிசளி்த்தவன்
தன் வரத்தைப் பரிசோதிக்கவே
கசப்பையே இனிப்பாக்கினானெ
கேலியில் திளைக்கிறது
அறுசுவைகளில் ஒன்று
*****
தனக்கு எதுவுமே தெரியாதென்று
உரத்த குரலில் வாக்குமூலமாகும்
நெருக்கமான அன்பொன்றின்
துரோகங்களில்
வழிகிறது ஒவ்வொரு சொட்டாக
வாழ்வு முழுக்க சுவைப்பதற்கான
கசப்பின் சுவை
****
இரவு கசப்பை உருவாக்கிறது
பகல் அதை ஒரு கோப்பை மதுவாக்குகிறது
பரிபூரணங்களில் மூழ்கி மூழ்கி
நனைத்தெடுத்த அச்சுவைதான்
தன் கொடுங்கரங்களால்
வாழ்வின் இறுதிவினாடியை
மரணமெனக் கொண்டாடுகிறது

******
புகார்களற்றவனின் கரங்களில்தான்
நெறிபடுகிறது யாரோ ஒருவனின் சுயம்
ஏமாந்த ஒருவனின் தோளிலேறி
தேர்பார்க்கும் ஒருவன்தான்
தானே கடவுளின் பிம்பமென
பிதற்றித் திரிகிறான்
****
வஞ்சக சொல்லொன்றைத்தான்
தலைவாழை இலையில் பரிமாறுகிறாய்
மூன்றுவேளை பசியாற்றி
மூச்சுள்ள காலம்வரை
உபசரிப்பேனென
ஊரெல்லாம் கல்வெட்டாக்குகிறாய்
******
ஒவ்வொரு முறையும்
உன் விருந்தில்
தாராளமாக்கப்படும் பெருங்கசப்பை
இனிப்பெனச் சுவைக்கும்படி
வாள் சுழற்றும்
உன் அன்பு
காலவிசமாக்கி
இனிப்பாக்குகிறது மரணத்தை
-***
மறுபடியும் மறுபடியும்
தேனில் குழைத்த அதிகாரத்தை
என் மீதான பெரும் நம்பிக்கையென
திணிக்கிறாய்
காறி உமிழுமென்னை
செயலற்றவனென கூசாமல் கூறும்
உன்னைத்தான்
என் தெய்வமென கொண்டாடும்படி
வாய்த்திருக்கிறது வாழ்க்கை
******
என் கடிகாரம்தான்
உன் கையிலிருக்கிறது
பிறகென்ன
எல்லா பொழுதுகளும்
உன் வசமாகிறது
பசித்த பொழுதெல்லாம்
தவறாமல் ஊட்டுகிறாய்
ஒரு உருண்டை பெரும் நஞ்சை
*****
இந்த வாழ்வைக் கொடையென
கொண்டாடும்படி
வற்புறுத்துகிறாய்
கோடையை மட்டும்
விளைச்சலாக்கும் நிலத்தை எனக்கென
பரிசளிக்கும் நீதான்
எனது பருவகாலங்களை
பகடிசெய்கிறாய்
உனக்குள் இருக்கும் நான்
எப்போதும் கைப்பிடி விதை
*-***

Tuesday, 18 October 2016

பறவைகள் பத்து விதம்

பறவைகள் பத்து விதம்
க.அம்சப்ரியா
***********
கைப்பிடி தானியங்களை வேண்டி
இறைஞ்சுகின்றன
நானோ
தசையறிந்து கொடையளிக்கத் தயாராக...
******
கைப்பிடி தானியங்களோடு காத்திருக்கிறேன்
தசையறிந்து தர வேண்டி
மல்லுக்கட்டுகின்றன

******
கையருகே வானம்
வாவென்று அழைக்கி்ன்றன
போதுமானதாக இருக்கின்றது
இந்தப் பெருநிலத்தின்
சிறு நிலம்
*****
கையளவு கூண்டில்
நகரும் காலத்தை
விட்டுவிட ஆகாயம் தேடுபவனை
விரட்டுகின்றன
வானமென்பது பறவைகளுக்கானது
பறவையானவர்களுக்கு அல்லவென்று
****
தாகமென்று இறைஞ்சின
மலையிலிருந்து சேகரித்தவற்றை
கிண்ணத்தில் பரிமாறினேன்
இன்றைய குருதி கேட்டு
வம்பிழுக்கின்றன
****
விருந்துக்கு வந்தவர்களுக்கு
உச்ச உபசரிப்பென
குவளை குருதியை பிரியமாக்கினேன்
பொருத்தமில்லா விருந்தென
கிணற்றை அபகரித்து கெக்கலிக்கி்ன்றன

*****
ஒரே ஒரு மரம் வேண்டுமென
மன்றாடின
வனத்தையே பிடுங்கிக் கொண்டு
நானே தானமளித்ததாக
வாக்குமூலம் தருகின்றன

****
இன்னும் கூடற்று
அலைதல் கூடாதென
இரக்கப்பட்டு ஒரு கிளையானேன்
வனத்தைக் களவாண்டவனென்று
பிராது கொடுக்கின்றன
****
பறவையாக இருப்பது விடுதலையின் அடையாளமென்று
வானத்தை கைகாட்டின
திரும்பிப் பார்த்தேன்
பறி போயிற்று கையளவு நிலமும்
******
பறவை சினேகிதம் கைகூட
வானத்தை உருவாக்காதவன்
கூண்டிற்குள் அடைக்கிறானென
தலைக்கு மேலே எச்சமிட்டு
பறவையெனில் வானம்
வானமெனில் பறவையென
முணுமுணுத்தன
*****

அருக்கானியின் வளர்ப்பு

அருக்கானிகள் பூனை வளர்க்கிறார்கள்
கிளி வளர்க்கிறார்கள்
ஆடு வளர்க்கிறார்கள்
செடி வளர்க்கிறார்கள்
வாய்க்கிறவற்றையெல்லாம் வளர்க்கிறார்கள்
வளர்ப்புகளுக்கிடையில்
யாருமறியாமல் கண்ணீரையும் வளர்க்கிறார்கள்
யாரும் கேட்டால் ஒன்றுமில்லையென்று
தவறாமல் சொல்கிறார்கள்
*****

Wednesday, 12 October 2016

தலையெல்லாம் பஞ்சோடும்
வயிற்றைக் கிள்ளும் பசியோடும்
அகாலத்தில் வீட்டிற்குள் நுழையும்
அருக்கானியில் மனசெல்லாம்
நாற்றங்கால்
நடவு களையெடுத்தல்
களத்துவேலை
****

Sunday, 9 October 2016

அம்சப்ரியா பத்து கவிதைகள்

கவிதை ஒன்று
*******

மலையென சொற்கள்
யாருக்கு யார் அள்ளிச் செல்வதென்று
குழம்பிக்கிடக்கின்றது வெளி
மலையைக் குடையும் எலிகள்
இப்போது முந்திக்கொள்கின்றன
சொற்களைக் சொற்களால் வேட்டையாடும்
லாவகம் மிக்க ஒருவனின் கைவசமாகிறது சொற்கள்
சொற்களற்ற ஒருவன்
கெஞ்சிக் கெஞ்சி ஓய்ந்து துயருற
மௌனக் கயிற்றால் மாய்க்கிறான் தன்னை

கவிதை இரண்டு
****நள்ளிரவில் அழைத்துக்கொண்டே இருக்கிறாள்
எந்தக்கடவுளாவது
எதன் பொருட்டாவது
இவ்வழியே பயணிக்கிற போது
இக்குரலை செவிமடுக்கக் கூடுமென்று
நூற்றாண்டுகள் கடந்தும்
இடைவிடாமல் ஒலிக்கிறது
எந்தப்பறவையோ
எந்தக்கடவுளையோ
அழைக்கும் கையறு குரல்
சுருண்டு படுத்து தயாராகிறாள்
இன்னுமொரு ஆங்காரங்குரலுக்கு
*****
கவிதை மூன்று
*****
போர்க்களத்தில் காத்திருக்கிறார்கள்
பொருத்தமான ஆயுதங்களுடன்
வீழ்த்தும் உபயங்களை
எதிரிகளுக்கே கையளித்து விட்ட ஒருவன்
இடைவிடாமல் இறைஞ்சுகிறான்
ஒற்றை ஆயுதமேனும் பிச்சையிட வேண்டி
கருணை மிக்க கடவுள்
ஆயுதங்களைப் பிரயோகிக்கும்
கலையொன்றை எதிரிகளிடம் சமர்ப்பிக்கும்
காட்சியொன்றை கண்ணுறுகிறான்
உடலெங்கும் ஆயுதங்களால் துளைக்கப்பட
இம்முறை மண்டியிட்டு சபிக்கிறான்
கருணையுள்ளவரே
கருணையுள்ளவரே
கைவிட்டமைக்கு ஆயிரம் நன்றி
ஆயிரம் நன்றி
*****
கவிதை நான்கு
*******

அன்புமிகக் கொண்ட
திரு ஐசக் நியூட்டனுக்கு நன்றி
பந்து போல மேலெழும்பி
வீழும் இக்கனவை
உம் விதி கொண்டு திருப்தியாகிறேன்
பலூனுக்குள்தான் இருக்கிறார்
எம் ஆண்டவர்
ஆண்டு கொண்டேயிருக்கும் அவரை
ஒரு பிடி சோறள்ளிப் போடச் சொல்லி
இக் கவிதையை எழுதும் இவனுக்கு
இப்போது பசியே இல்லை
&***
கவிதை ஐந்து
******
இந்த அகாலங்களே
பேரன்புடன் கட்டியணைத்துக் கொள்கினறன
எரிக்க எரிக்கச் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுகின்ற மிருகத்தின்
கொடும்பசிக்கு இரையாகிறேன்
விடைபெறும் கணங்களின் மீதே
அளவற்றுச் சுரக்கிறது துயர்பிரியமொன்று
என்க்குப் புலப்படாத திசையொன்றில்
என்னைத் தொலைத்துவிட
உங்களில்தான் யாரோ ஒருவரை
தேடிக்கொண்டிருக்கிறேன்

கவிதை ஆறு
******
புறக்கணிக்கப்பட்ட  சிறு கல்லொன்று
நழுவி நழுவி உருள்கிறது
கிளை நுனியில் ஊஞ்சாலாடும்
சிறு பறவையொன்று
நழுவி விழுகிறது
இன்னும் கூடுதலாக
உதிர்கிறது
சில இலைகள்
கூடவே நானும்
****

கவிதை ஏழு
********
இது இல்லை நான்
இது போல இல்லை நான்
இங்கு இருப்பதும் நானில்லை
இவர்களில் எவரும் நானில்லை
இல்லாத ஒன்று
இழுத்துச் செல்கிறது
இல்லாத ஓரிடத்தில் கரை ஒதுங்குகிறேன்
இல்லாத வாழ்வை
இல்லை என்று  சொல்லும்படியாக
இல்லை இக்கணம்

கவிதை எட்டு
*****
பழுத்து உதிர்ந்து
வெகு நாட்களாயிற்று
இருந்த சுவட்டின்
ஓரிட கணுவின் அடையாளத்தில்
எல்லாமுமாக இருப்பதாக
பிதற்ற
வெட்கமாகத்தான் இருக்கிறது
இந்த வாழ்வின் சாபமாக
வாழ்தலாகிறது வாழ்வு

கவிதை ஒன்பது
*****
எங்கிருந்து புறப்பட்டதென்று
தெளிவிருக்கிறது
எவ்வழியாக பயணிப்பதென்றுதான்
கைகாட்டிகள் இல்லை
பாதைகளில் பாதங்கள் தொலைந்து
பறந்தபடியிருக்கும் பறவையின்
கால்களில்
நானிருக்கும் அடையாளத்தை
யாரோ ஒருவனுக்கு
காட்டிக் கொடுக்கும் அவனை
இம்முறை கல்லால் அடித்துக் கொல்லவே
உத்தேசம்.

கவிதை பத்து
******
எல்லாரின் வீட்டிலும்
இருக்கிறேன் தொட்டிச்செடியாக
எனக்கிருக்கிறது ஒரு காடு
வேறென்ன செய்வது
கோடையை சிருஷ்டித்து
ஒற்றை தீக்குச்சியால்
சாபம் தீர்த்து
நீரற்ற பருவத்தின்
பெரும் அடிமையென
உங்களிலும் இருக்கிறேன் நான்
*****

Saturday, 10 September 2016

அம்சப்ரியா பத்து கவிதைகள்

கவிதை பத்து
*********
பிணங்களைச் சுமந்தபடி
ஓடிக்கொண்டிருக்கிறாய்
பால்யம் எடை குறைந்திருக்கிறது
இளமையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாய்
முதுமை கால் இடறி விழுகிறது
யாவற்றையும் சகித்து
ஓடிக்கொண்டிருக்கும் உனக்கொரு
கௌரவம் வாய்க்கிறது
பிணங்களின் நதியென

கவிதை ஒன்பது
********
ஒற்றைக் கிரீடம்தான்
ஆனாலும் கழற்ற மனதற்றவனின்
நிழலில் படுத்திருக்கிறது
மூச்சு வாங்கியபடியாய்
ஒரு சுய பிம்பம்
*******
கவிதை எட்டு
******&
மடிந்த பொழுதை
மடியில் கட்டிக்கொண்டவள்
தேசாந்திரம் புறப்பட்டு
ஆயிற்று வெகு நாட்கள்
ஆனாலும் என்ன
வீட்டைத் திறந்து திறந்து
தேடுகிறாள்
கைமறதியாய் எங்கோ வைத்துவிட்ட
தனக்கான வாழ்வை

******
கவிதை ஏழு
*****
எவ்வளவு காலமாயிற்றென்று
இடைவிடாமல் தேடுகிறாள்
இந்த மக்கள் பெருவழியொன்றில்தான்
தன்பொழுதைக் கொன்று
வேலிக்கு வெளியே வீசினாள்
எல்லோருடனும் ஐக்கியமாகும் ஒருத்தி
விரைவில் மனநோயாளியென
அறிவிக்கப்படுகிறாள்

கவிதை ஆறு
*******
ஒரு காலைப்பொழுது
இவ்வளவு லாகவமாக அமைவதில்லை
ஒற்றைப்பறவை
ஒற்றைக்கிளையில்
ஓராயிரம் வருடங்களாக ஊஞ்சலாடுவதை
கண்ணுற்றதென்னவோ இன்றுதான்
******
கவிதை ஐந்து
******
முடிவுற்றதாக இல்லாத பயணம்
நீள்கிறது இக்கணமும்
ஆயிரம் சொற்கள் சூழ
ஆயிரம் பத்திகள் கொண்டாட
ஆயிரமாயிரம் பக்கங்கள் வாழ்த்தியிருந்த
இந்த வாழ்வு
மௌனித்திருந்தது உரத்த சப்தங்களின் துணையோடு.

கவிதை நான்கு
*******
துயரப்பூக்கள் நிறைந்திருக்கும்
இவ்வனத்தைக் கடக்க
ஒரு ஆரஞ்சுப்பழத்தினைக் கொண்டு
பிரார்த்தனை தொடர்கிறது
வாழ்தல் இப்படியொரு அபத்தமாவென
கெக்கலிக்கிறது
ஆனாலுமென்ன
மரத்திலிருந்து அழைக்கும்
அப்பறவைக்கு என்ன பதிலாவதோ?

கவிதை மூன்று
******
இதுவொரு ஒற்றைச்சிலை
ஓராயிரம் வேண்டுதல்களால்
சில்லுகளாக சிதறுகிறது
யாரோ ஒருவனுக்கான வழித்தடமாக
மாறும் யுகத்திற்கான தவத்தில்
வளரத்துவங்குகிறது புற்று

கவிதை இரண்டு
*******
நெடுங்காலமாக இருக்கிறது
ஒரு பிச்சைப்பாத்திரம்
வந்து நிறைகிற எதுவும்
தீர்க்கவில்லை பசி
விரியும் காலமே வயிறாக
படைத்தவனை தேடுகிறான்
அலைகிறான் அவனும்
ஒரு பிச்சைப்பாத்திரத்தோடு

கவிதை ஒன்று
******
இன்றைக் கொலை செய்து
முற்றத்தில் போடுகிறவனோடு
தொடர்கிறது பயணம்
இந்தக்கரங்களில் பூத்திருக்கும்
நீலநிறப்பூக்களை
பறித்துத் பறித்துத் தருகிறான் பதிலுக்கு
வேனிற்காலம் தவிர
வேறொன்றும் அறியாதவனின்
அகக்காலம் அகலாமாகிறது
பின்னிரவில் முளைத்துக்கொள்ளும்
வரம் பெற்றவனின் பாதை
நீள்கிறது எவரையும் எதிர்பார்க்காமல்
*******

Saturday, 27 August 2016

தற்கொலை இறுதித் தீர்வல்ல

தற்கொலை இறுதி தீர்வல்ல
**************************&**
  வாழ்வின் கடைசி மனிதரும் தம்மைக் கைவிட்டதாகவே பலரும் நினைக்கிறார்கள்.உலகில் கடைசி காதலோ,கடைசி நட்போ ,கடைசி மனிதரின் நெருக்கமென்றோ இல்லை என்பதை பலரும் உணர்ந்து கொள்வதற்குள் வாழ்க்கையை ஒன்றுமற்றதாக மாற்றிக் கொள்கிறார்கள்.
           தேவையற்ற ஆசைகள்,வீணான நம்பிக்கைகள்,ஒருவரின் மீது அளவுகடந்து வைக்கிற நம்பிக்கை ,எதையும் முன் யோசனையற்று உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிற அறியாமை இவைகள் ஏமாற்றங்களையும் துயரங்களையும் வீடு தேடிவந்து பரிசாக்குகின்றன.
            தோல்வி என்பதே உலகில் இல்லை.இன்னும் ஒரு முயற்சிக்கு தேவையான ஆலோசனைகளும்,தோல்வியென்று மனம் தவிக்கிற தருணங்களில் தோள்தட்டி நம்பிக்கையூட்டும் சில சொற்களுமே தேவை.
         துர்பாக்கியமான நிலையாக யாரை இந்த மனம் நம்பியதோ அந்த மனம்தான் நமக்கான துரோகத்தை விருந்தாக தருகிறது.இப்படி நினைக்கிற போது ஆழ்மனதின் எச்சரிக்கையை புறக்கணித்திருப்போம்.
           காதலென்று கையேந்துகிற இதயமொன்று பிறகொரு சமயம் நம்மை கைவிடப்போகிறது எச்சரிக்கையாக இரு என்றும்,வியாபாரத்தில் இலாபம் பார்க்க இணைந்து பணியாற்றலாம் வா என்று அழைக்கிற அழைப்பில் ஒரு வஞ்சகம் ஒளிந்திருக்கிறது,இது வேண்டாம் என்று உள் மனக்குரல் எச்சரித்த போதும்,இந்தக்காதல் இறுதியில் கண்ணீரில்தான் முடியும் என்று உள்ளொளி கவனப்படுத்திய பின்னும் நம் உணர்ச்சி மனதின், முந்திக்கொள்கிற தன்மையால் வீணாக கவலைகள் வந்து சேர்கிறது.
          இவைகளை உணர்வதற்குதான் யாரோ ஒருவர் எழுதிவைத்த புத்தகங்களும்,யாரோ ஒருவர் நிகழ்த்திய உரைகளும்  நமக்கு பெரும் வழிகாட்டும்  தீபங்களாக விளங்குகின்றன.
              ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக்குள்   பலபல தோல்விகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் திறக்கப்படுகின்றன.வெற்றிக்கான விதைகளை எந்தப்பருவகாலத்தில் விதைக்கலாம் என்பதை சொல்லித்தருகின்றன.மனதை சலனப்படுத்துகிற களைகள் எப்போதெல்லாம் செழிக்கத்துவங்குகின்றன என்றும்,அவற்றை எந்தக் களைக்கொல்லியால் அகற்றலாம் என்பதையும் சொல்லாமல் சொல்கின்றன.
             நாம் வாழ வேண்டிய தேவை நமக்கு இல்லாமல் போனாலும் ,நம்மைப்போன்ற  யாரோ ஒருவரின் வாழ்விற்கு பற்றிக் கொள்ள ஒரு பிடியாக இருக்க வாய்ப்புண்டு.
       ஆறுதலுக்கு ஒரு சொல்லுமற்று ஏங்கிக்கிடக்கற ஒருவர்க்கு ஒரு மலையளவு சொற்களை அன்பளிக்க முடியும்.
          நமக்கு நாமே போட்டுக்கொள்கிற வீணான கர்வவேலிகளையும்,நமக்கு நாமே உருவாக்கிக்கொள்கிற பொய்க்கதவுகளையும் அகற்றும் போதுதான் நமக்குப்பிடித்தவர்கள் தாராளமாக உள்ளே வருகிறார்கள்.
                    
           நம்மால் பயனடைய  உலகின் ஒவ்வொரு தெரு முனையளவிலும் ஒருவர் காத்திருக்க இனி யாருமில்லை என்பது போல மரணத்தின் கதவுகளை நாமே இனியும் தட்டலாமா?பிறந்தவர்கள் யாவரும் ஒரு நாள் இறந்தே தீரவேண்டும் என்பது இயற்கைவிதியாக இருக்கும் போது மரணத்தின் கதவுகளை நாமாக வலிய வலிய தட்டவேண்டிய அவசியம் என்ன?இத்தனை பேர் நடந்து போகும் தெருவில் நம் சொல்லுக்கு மதிப்பளிப்பவரைத் தேடாமல் நாமே விரக்தியில் தொலைந்து போவது அறியாமையல்லவா?
          தற்கொலை வாழ்வின் இறுதித் தீர்வல்ல.வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று துணிகிற ஒவ்வொரு வினாடியும் நமக்குள் பூத்துக்குலுங்கப்போகிற வசந்தகாலத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் எழுத்தாக துவங்குகிறது.நம்பிக்கையால் உருவாகிற எழுத்துகள் சாதனை வாக்கியங்களுக்கு அச்சாரமிடுகின்றன.
             சாதிக்கத் தூண்டும் சொற்கள் வாழ்வின் ஆற்றல் மிகு வரலாற்றை எழுதத் துவங்குகின்றன.
        வாருங்கள்...வாழ்ந்தே பார்ப்போம்
*******
       *******

Monday, 15 August 2016

அம்சப்ரியா பத்து கவிதைகள்

கவிதை பத்து
***********
இந்த நாளின் கடைசி இலையை
உதிர்த்த மரமாக காத்திருக்கிறாய்
வேரிலிருந்து இலையாகிறேன்
காயாகிறேன் பிரியத்தால் கனிகிறேன்
நீ சுவைக்கவும் இளைப்பாறவும்.
என்னை உன் கிளையொன்றில்
அமர்த்துகிறாய் இறுதியாக.
இருவரும் பறவை மரமாகிறோம்

********க******வி****தை*****
கவிதை ஒன்பது
******
உங்களோடு நான் ஏன்
புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை
நீங்கள் கிழக்கில்
நான் மேற்கில்
இணையும் புள்ளியில்
உடைந்த புள்ளிகள்

கவிதை எட்டு
******
உங்கள் வீட்டிற்குள்
விருந்தினனா
அடிமையா என்று தடுமாறிக்கொண்டிருந்தேன்
எங்கிருந்தோ வந்த பறவை
இடித்துச் சொன்னது
இது உன்னுடைய வீடென

*******
கவிதை ஏழு

வாழ்வுணர்த்தும் தருணங்களில் ஒன்றைத்தான்
நம் குளமாக்கினோம்
நீரில் அமிழும் என்னை
வேடிக்கை பார்க்கிறது
உன் நிலா
******
*கவிதை ஆறு
*********
யாருடைய காலத்தை
வாழ்ந்தபடி இருக்கிறோம்
யாருடைய காலத்தையோ
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
யாரோ ஒருவரின் காலத்தை
வாழ்ந்தபடி இருக்கிறோம்
யாரோ ஒருவரிடம்
இழந்தபடியிருக்கிறோம் அவரவர் காலத்தை
வானமற்ற பறவை நீந்தத் தொடங்குகிறது

கவிதை ஐந்து
*******
வழிதுறந்து நீந்தும் மீனை
தூண்டிலால் வழிகாட்டும் ஒருவனை
இம்முறையும் கொண்டாடுகிறது
காலத்தின் முதல் வினாடி
வாயேன்
உன்னை தொட்டியாக்கியபடி
நீந்திக்களிக்கத் தயார் நான்
******
கவிதை நான்கு

*******
உனக்குப் பிடித்த மலைவனத்திலிருந்து
மூலிகையொன்றை பறித்து வந்த
இந்த நாளினை
உன் முந்தானையில் முடிந்தாய்
ஒவ்வொரு முத்தமும்
ஒரு வனமாகிட
உனக்கான மூலிகைகளைப் பறித்தபடியே நான்
***********
கவிதை மூன்று
********
ஒரு குறுஞ்செய்தி
தன் இறக்கைகளை விரிக்கிறது
உடைபட்ட மலைகளை கடக்கிறது
தாகம் அடக்கி கடல்கள் கடக்கிறது
ஒரு அந்தரவனம் குறுக்கிடும் போது
முகம் திருப்பிக் கொள்கிறது
தரையிரங்கி
இதழ்களில் அமர்கிறது
பிறகென்ற யோசனையற்று
மேனியெங்கும் பயணிக்கிறது
இரவும் பகலும் முத்தமாகிட
உயிர்க்கிறது ஒரு பறவை
**********
கவிதை இரண்டு
***********
விடிந்ததும் ஒரு நாள்
தன்னைத் தடவிப்பார்த்தாள்
நம்பவே முடியவில்லை
இத்தனை சிறகுகளா?
பிறகேன் குளத்திலிருந்தோமென
அம்மாவிடம் கேட்டாள்
அதெல்லாம் தனக்குத் தெரியாதென்றாள்
வானமறியாதவள்.
********
கவிதை ஒன்று
*****
இது என்னுடைய அறையில்லையென்றேன்
எனக்கும் இது பொருத்தமில்லை என்றான்
அறைகள் நமக்குப் பொதுவென்கிறதே
இந்த உலகம்
என்ன செய்யலாம்
வா வில் வித்தை பழகலாம்
**********
***********

Saturday, 9 July 2016

அம்சப்ரியா பத்து கவிதைகள்


கவிதை ஒன்று

நள்ளிரவில் யாருமற்ற வனத்தில்
நடந்தேகுகிறாள் யாரோ ஒருவனின் தேவதை
கடந்து வந்த சரளைக்கற்களின்
மீதான வன்மத்தை
தன் நீண்ட கூந்தலால் உருவான
சவுக்கொன்று கொண்டு விளாசுகிறாள்
பாதையோ பசித்து பசித்து விரிகிறது

கவிதை இரண்டு
**********&

தனக்கான இரவை களிமண் தீபமாக்குகிறாள்
இடது கண்ணின் துயர நதியை ஊற்றி
முதல் திரியை பற்ற வைக்கிறாள்
எரிந்தடங்குவதை உறுதிப்படுத்தியவள்
இரண்டாவது தீபத்திற்கு

வலது கண்ணை தீபமாக்குகிறாள்
தீபங்களின் அரசியென
பற்ற வைக்கிறாள் தீபங்களை

கவிதை மூன்று
********
விரைந்தோடும் அந்த நள்ளிரவுப்
பேருந்தை
குதிரையாக்கி பயணமாகிறாள்
தன்னை வஞ்சித்த அரசனை
எப்போர்த்தந்திரங்களையும் பயன்படுத்தி
வெல்வதற்கான வழியைக் கூறுமாறு
மன்றாடுகிறாள் வஞ்சதேவதையிடம்
கதவொன்றை திறந்த தேவதை
காணப்பணித்த இடத்தில்
எல்லா தேசங்களின் அரசர்களும் .

கவிதை நான்கு

************&*
இப்பாதையில் கட்டற்ற காளையொன்று
யானையின் பின்னால் பித்தாய் அலைகிறது

கவிதை ஐந்து
************
வாலறுந்த
இப்பல்லி
என்னிடம் சொல்லவென
வைத்திருந்த கதைகளை
அவசரமாகப் பெற்று
எரியும் நெருப்பில் வீசினேன்
அதில் என் கதையுமல்லவா இருக்கிறது

கவிதை ஆறு
**********
சந்தித்துத் திரும்பும் போது
கனக்கிறது
கூடுதலாக இன்னும்
இரண்டு சிறகுகள்
நறுக்கவும் வேண்டாம்
பறக்கவும் வேண்டாம்
என்கிறது உயிர்

கவிதை ஏழு
***********
இதற்கு மேலும்
உன் பொய்களை
எப்படி வளர்ப்பாயென
எதிர்பார்க்கின்றன
உண்மைகளால்
புதைக்கப்பட்ட யாவையும்

கவிதை எட்டு
*********
படுக்கையில்
கையைக் காலை ஆட்டியபடி
உருண்டு புரண்டு
வரமறுத்து அடம்பிடிக்கிறது
யாவர்க்குமான ஒரு உறக்கம்

கவிதை ஒன்பது
****************

மரமற்றவனின் பறவையொன்று
வந்தமர்கிறது உன்கிளையில்
துவங்குகிறாய்
இம்முறையும் குறிபார்த்தலை

********
கவிதை பத்து
***********
மீன்களைத் தொலைத்ததற்காக
கண்ணீர் சிந்தும் கடலொன்று
கரையேறுகிறது இம்முறை
மணல் எழுதும் துயர வரிகள்
யாவரின் சாயலாகவும் ...
**********

Saturday, 7 May 2016

எனக்குப் பிடித்த கவிதைகள்

எனக்குப் பிடித்த கவிதைகள்
******-**********************

  ஒரு கிளியாக இருந்திருந்தால்
  வானத்தின் அருமை தெரியும்
   என்கிறாய்
   இது நெல் தின்னும் கிளி
         
               ** உமாமோகன்****
       (துயரங்களின் பின்வாசல்)
********************************
            என்று,,,,
        ************
உன் நிர்வாணம்
உன்னை ஏன்
இவ்வளவு பயமுறுத்துகிறது?
அந்தரங்கமாக குளியலறையில்
மேலெங்கும் நீர் வழிகையில்
குளிரான குற்றவுணர்வின் ஈரத்தில்
உன் கண்ணீரின் வெதுவெதுப்பு கலக்கிறது
அறுவை சிகிச்சை மேசையில் படுத்தபடி
ஆடைகள் அனைத்தையும்
களைந்து விட வேண்டாமென
மீண்டும் மீண்டும் இறைஞ்சுகிறாய்
உன் வஸ்திரங்கள் அனைத்தும்
உன் உடலின் அடர்வாசத்தை
காற்றெங்கும் நிரப்புகின்றன
ஒரு கலவியின் துவக்கத்தில்
உன்னால் கைவிடப்பட முடியாத
உடைகளை வைத்துக் கொண்டு
என்ன செய்வதென்று தடுமாறுகிறாய்
நான் அறிந்து கொள்கிறேன்
உன் உடலை அல்லாது
நீ வேறு எதற்கோ அஞ்சுகிறாய் என்று
வேறு எதையோ மறைக்க விரும்புகிறாய் என்று
         
        *****சம்யுக்தா மாயா****
(டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு)
************----------**********------
     உன் கோரைப் பற்களுக்கும்
     கூர்நகங்களுக்கும்
     நடுவே சிக்கித் தவிக்கும்
     ருதுதன்மை அடையா
     சதைப் பிண்டத்தை
     கொன்று தின்ன
      உன் காமத்தால்
      நின்றுபோனது
      அந்தச் சிறுமியின்
      பூப்புநன்னீராட்டுச் சடங்கு.

               கீதாபிரகாஷ்
              ***-*************
(ஜனுக்குட்டியின் பூனைக் கண்கள்)

               ** பிடித்த கவிதை வரிசை இனியும் தொடரும்**