Saturday, 9 July 2016

அம்சப்ரியா பத்து கவிதைகள்


கவிதை ஒன்று

நள்ளிரவில் யாருமற்ற வனத்தில்
நடந்தேகுகிறாள் யாரோ ஒருவனின் தேவதை
கடந்து வந்த சரளைக்கற்களின்
மீதான வன்மத்தை
தன் நீண்ட கூந்தலால் உருவான
சவுக்கொன்று கொண்டு விளாசுகிறாள்
பாதையோ பசித்து பசித்து விரிகிறது

கவிதை இரண்டு
**********&

தனக்கான இரவை களிமண் தீபமாக்குகிறாள்
இடது கண்ணின் துயர நதியை ஊற்றி
முதல் திரியை பற்ற வைக்கிறாள்
எரிந்தடங்குவதை உறுதிப்படுத்தியவள்
இரண்டாவது தீபத்திற்கு

வலது கண்ணை தீபமாக்குகிறாள்
தீபங்களின் அரசியென
பற்ற வைக்கிறாள் தீபங்களை

கவிதை மூன்று
********
விரைந்தோடும் அந்த நள்ளிரவுப்
பேருந்தை
குதிரையாக்கி பயணமாகிறாள்
தன்னை வஞ்சித்த அரசனை
எப்போர்த்தந்திரங்களையும் பயன்படுத்தி
வெல்வதற்கான வழியைக் கூறுமாறு
மன்றாடுகிறாள் வஞ்சதேவதையிடம்
கதவொன்றை திறந்த தேவதை
காணப்பணித்த இடத்தில்
எல்லா தேசங்களின் அரசர்களும் .

கவிதை நான்கு

************&*
இப்பாதையில் கட்டற்ற காளையொன்று
யானையின் பின்னால் பித்தாய் அலைகிறது

கவிதை ஐந்து
************
வாலறுந்த
இப்பல்லி
என்னிடம் சொல்லவென
வைத்திருந்த கதைகளை
அவசரமாகப் பெற்று
எரியும் நெருப்பில் வீசினேன்
அதில் என் கதையுமல்லவா இருக்கிறது

கவிதை ஆறு
**********
சந்தித்துத் திரும்பும் போது
கனக்கிறது
கூடுதலாக இன்னும்
இரண்டு சிறகுகள்
நறுக்கவும் வேண்டாம்
பறக்கவும் வேண்டாம்
என்கிறது உயிர்

கவிதை ஏழு
***********
இதற்கு மேலும்
உன் பொய்களை
எப்படி வளர்ப்பாயென
எதிர்பார்க்கின்றன
உண்மைகளால்
புதைக்கப்பட்ட யாவையும்

கவிதை எட்டு
*********
படுக்கையில்
கையைக் காலை ஆட்டியபடி
உருண்டு புரண்டு
வரமறுத்து அடம்பிடிக்கிறது
யாவர்க்குமான ஒரு உறக்கம்

கவிதை ஒன்பது
****************

மரமற்றவனின் பறவையொன்று
வந்தமர்கிறது உன்கிளையில்
துவங்குகிறாய்
இம்முறையும் குறிபார்த்தலை

********
கவிதை பத்து
***********
மீன்களைத் தொலைத்ததற்காக
கண்ணீர் சிந்தும் கடலொன்று
கரையேறுகிறது இம்முறை
மணல் எழுதும் துயர வரிகள்
யாவரின் சாயலாகவும் ...
**********

No comments:

Post a Comment