கவிதை பத்து
***********
இந்த நாளின் கடைசி இலையை
உதிர்த்த மரமாக காத்திருக்கிறாய்
வேரிலிருந்து இலையாகிறேன்
காயாகிறேன் பிரியத்தால் கனிகிறேன்
நீ சுவைக்கவும் இளைப்பாறவும்.
என்னை உன் கிளையொன்றில்
அமர்த்துகிறாய் இறுதியாக.
இருவரும் பறவை மரமாகிறோம்
********க******வி****தை*****
கவிதை ஒன்பது
******
உங்களோடு நான் ஏன்
புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை
நீங்கள் கிழக்கில்
நான் மேற்கில்
இணையும் புள்ளியில்
உடைந்த புள்ளிகள்
கவிதை எட்டு
******
உங்கள் வீட்டிற்குள்
விருந்தினனா
அடிமையா என்று தடுமாறிக்கொண்டிருந்தேன்
எங்கிருந்தோ வந்த பறவை
இடித்துச் சொன்னது
இது உன்னுடைய வீடென
*******
கவிதை ஏழு
வாழ்வுணர்த்தும் தருணங்களில் ஒன்றைத்தான்
நம் குளமாக்கினோம்
நீரில் அமிழும் என்னை
வேடிக்கை பார்க்கிறது
உன் நிலா
******
*கவிதை ஆறு
*********
யாருடைய காலத்தை
வாழ்ந்தபடி இருக்கிறோம்
யாருடைய காலத்தையோ
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
யாரோ ஒருவரின் காலத்தை
வாழ்ந்தபடி இருக்கிறோம்
யாரோ ஒருவரிடம்
இழந்தபடியிருக்கிறோம் அவரவர் காலத்தை
வானமற்ற பறவை நீந்தத் தொடங்குகிறது
கவிதை ஐந்து
*******
வழிதுறந்து நீந்தும் மீனை
தூண்டிலால் வழிகாட்டும் ஒருவனை
இம்முறையும் கொண்டாடுகிறது
காலத்தின் முதல் வினாடி
வாயேன்
உன்னை தொட்டியாக்கியபடி
நீந்திக்களிக்கத் தயார் நான்
******
கவிதை நான்கு
*******
உனக்குப் பிடித்த மலைவனத்திலிருந்து
மூலிகையொன்றை பறித்து வந்த
இந்த நாளினை
உன் முந்தானையில் முடிந்தாய்
ஒவ்வொரு முத்தமும்
ஒரு வனமாகிட
உனக்கான மூலிகைகளைப் பறித்தபடியே நான்
***********
கவிதை மூன்று
********
ஒரு குறுஞ்செய்தி
தன் இறக்கைகளை விரிக்கிறது
உடைபட்ட மலைகளை கடக்கிறது
தாகம் அடக்கி கடல்கள் கடக்கிறது
ஒரு அந்தரவனம் குறுக்கிடும் போது
முகம் திருப்பிக் கொள்கிறது
தரையிரங்கி
இதழ்களில் அமர்கிறது
பிறகென்ற யோசனையற்று
மேனியெங்கும் பயணிக்கிறது
இரவும் பகலும் முத்தமாகிட
உயிர்க்கிறது ஒரு பறவை
**********
கவிதை இரண்டு
***********
விடிந்ததும் ஒரு நாள்
தன்னைத் தடவிப்பார்த்தாள்
நம்பவே முடியவில்லை
இத்தனை சிறகுகளா?
பிறகேன் குளத்திலிருந்தோமென
அம்மாவிடம் கேட்டாள்
அதெல்லாம் தனக்குத் தெரியாதென்றாள்
வானமறியாதவள்.
********
கவிதை ஒன்று
*****
இது என்னுடைய அறையில்லையென்றேன்
எனக்கும் இது பொருத்தமில்லை என்றான்
அறைகள் நமக்குப் பொதுவென்கிறதே
இந்த உலகம்
என்ன செய்யலாம்
வா வில் வித்தை பழகலாம்
**********
***********
No comments:
Post a Comment