கவிதை ஒன்று
*******
மலையென சொற்கள்
யாருக்கு யார் அள்ளிச் செல்வதென்று
குழம்பிக்கிடக்கின்றது வெளி
மலையைக் குடையும் எலிகள்
இப்போது முந்திக்கொள்கின்றன
சொற்களைக் சொற்களால் வேட்டையாடும்
லாவகம் மிக்க ஒருவனின் கைவசமாகிறது சொற்கள்
சொற்களற்ற ஒருவன்
கெஞ்சிக் கெஞ்சி ஓய்ந்து துயருற
மௌனக் கயிற்றால் மாய்க்கிறான் தன்னை
கவிதை இரண்டு
****நள்ளிரவில் அழைத்துக்கொண்டே இருக்கிறாள்
எந்தக்கடவுளாவது
எதன் பொருட்டாவது
இவ்வழியே பயணிக்கிற போது
இக்குரலை செவிமடுக்கக் கூடுமென்று
நூற்றாண்டுகள் கடந்தும்
இடைவிடாமல் ஒலிக்கிறது
எந்தப்பறவையோ
எந்தக்கடவுளையோ
அழைக்கும் கையறு குரல்
சுருண்டு படுத்து தயாராகிறாள்
இன்னுமொரு ஆங்காரங்குரலுக்கு
*****
கவிதை மூன்று
*****
போர்க்களத்தில் காத்திருக்கிறார்கள்
பொருத்தமான ஆயுதங்களுடன்
வீழ்த்தும் உபயங்களை
எதிரிகளுக்கே கையளித்து விட்ட ஒருவன்
இடைவிடாமல் இறைஞ்சுகிறான்
ஒற்றை ஆயுதமேனும் பிச்சையிட வேண்டி
கருணை மிக்க கடவுள்
ஆயுதங்களைப் பிரயோகிக்கும்
கலையொன்றை எதிரிகளிடம் சமர்ப்பிக்கும்
காட்சியொன்றை கண்ணுறுகிறான்
உடலெங்கும் ஆயுதங்களால் துளைக்கப்பட
இம்முறை மண்டியிட்டு சபிக்கிறான்
கருணையுள்ளவரே
கருணையுள்ளவரே
கைவிட்டமைக்கு ஆயிரம் நன்றி
ஆயிரம் நன்றி
*****
கவிதை நான்கு
*******
அன்புமிகக் கொண்ட
திரு ஐசக் நியூட்டனுக்கு நன்றி
பந்து போல மேலெழும்பி
வீழும் இக்கனவை
உம் விதி கொண்டு திருப்தியாகிறேன்
பலூனுக்குள்தான் இருக்கிறார்
எம் ஆண்டவர்
ஆண்டு கொண்டேயிருக்கும் அவரை
ஒரு பிடி சோறள்ளிப் போடச் சொல்லி
இக் கவிதையை எழுதும் இவனுக்கு
இப்போது பசியே இல்லை
&***
கவிதை ஐந்து
******
இந்த அகாலங்களே
பேரன்புடன் கட்டியணைத்துக் கொள்கினறன
எரிக்க எரிக்கச் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுகின்ற மிருகத்தின்
கொடும்பசிக்கு இரையாகிறேன்
விடைபெறும் கணங்களின் மீதே
அளவற்றுச் சுரக்கிறது துயர்பிரியமொன்று
என்க்குப் புலப்படாத திசையொன்றில்
என்னைத் தொலைத்துவிட
உங்களில்தான் யாரோ ஒருவரை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கவிதை ஆறு
******
புறக்கணிக்கப்பட்ட சிறு கல்லொன்று
நழுவி நழுவி உருள்கிறது
கிளை நுனியில் ஊஞ்சாலாடும்
சிறு பறவையொன்று
நழுவி விழுகிறது
இன்னும் கூடுதலாக
உதிர்கிறது
சில இலைகள்
கூடவே நானும்
****
கவிதை ஏழு
********
இது இல்லை நான்
இது போல இல்லை நான்
இங்கு இருப்பதும் நானில்லை
இவர்களில் எவரும் நானில்லை
இல்லாத ஒன்று
இழுத்துச் செல்கிறது
இல்லாத ஓரிடத்தில் கரை ஒதுங்குகிறேன்
இல்லாத வாழ்வை
இல்லை என்று சொல்லும்படியாக
இல்லை இக்கணம்
கவிதை எட்டு
*****
பழுத்து உதிர்ந்து
வெகு நாட்களாயிற்று
இருந்த சுவட்டின்
ஓரிட கணுவின் அடையாளத்தில்
எல்லாமுமாக இருப்பதாக
பிதற்ற
வெட்கமாகத்தான் இருக்கிறது
இந்த வாழ்வின் சாபமாக
வாழ்தலாகிறது வாழ்வு
கவிதை ஒன்பது
*****
எங்கிருந்து புறப்பட்டதென்று
தெளிவிருக்கிறது
எவ்வழியாக பயணிப்பதென்றுதான்
கைகாட்டிகள் இல்லை
பாதைகளில் பாதங்கள் தொலைந்து
பறந்தபடியிருக்கும் பறவையின்
கால்களில்
நானிருக்கும் அடையாளத்தை
யாரோ ஒருவனுக்கு
காட்டிக் கொடுக்கும் அவனை
இம்முறை கல்லால் அடித்துக் கொல்லவே
உத்தேசம்.
கவிதை பத்து
******
எல்லாரின் வீட்டிலும்
இருக்கிறேன் தொட்டிச்செடியாக
எனக்கிருக்கிறது ஒரு காடு
வேறென்ன செய்வது
கோடையை சிருஷ்டித்து
ஒற்றை தீக்குச்சியால்
சாபம் தீர்த்து
நீரற்ற பருவத்தின்
பெரும் அடிமையென
உங்களிலும் இருக்கிறேன் நான்
*****
No comments:
Post a Comment