பறவைகள் பத்து விதம்
க.அம்சப்ரியா
***********
கைப்பிடி தானியங்களை வேண்டி
இறைஞ்சுகின்றன
நானோ
தசையறிந்து கொடையளிக்கத் தயாராக...
******
கைப்பிடி தானியங்களோடு காத்திருக்கிறேன்
தசையறிந்து தர வேண்டி
மல்லுக்கட்டுகின்றன
******
கையருகே வானம்
வாவென்று அழைக்கி்ன்றன
போதுமானதாக இருக்கின்றது
இந்தப் பெருநிலத்தின்
சிறு நிலம்
*****
கையளவு கூண்டில்
நகரும் காலத்தை
விட்டுவிட ஆகாயம் தேடுபவனை
விரட்டுகின்றன
வானமென்பது பறவைகளுக்கானது
பறவையானவர்களுக்கு அல்லவென்று
****
தாகமென்று இறைஞ்சின
மலையிலிருந்து சேகரித்தவற்றை
கிண்ணத்தில் பரிமாறினேன்
இன்றைய குருதி கேட்டு
வம்பிழுக்கின்றன
****
விருந்துக்கு வந்தவர்களுக்கு
உச்ச உபசரிப்பென
குவளை குருதியை பிரியமாக்கினேன்
பொருத்தமில்லா விருந்தென
கிணற்றை அபகரித்து கெக்கலிக்கி்ன்றன
*****
ஒரே ஒரு மரம் வேண்டுமென
மன்றாடின
வனத்தையே பிடுங்கிக் கொண்டு
நானே தானமளித்ததாக
வாக்குமூலம் தருகின்றன
****
இன்னும் கூடற்று
அலைதல் கூடாதென
இரக்கப்பட்டு ஒரு கிளையானேன்
வனத்தைக் களவாண்டவனென்று
பிராது கொடுக்கின்றன
****
பறவையாக இருப்பது விடுதலையின் அடையாளமென்று
வானத்தை கைகாட்டின
திரும்பிப் பார்த்தேன்
பறி போயிற்று கையளவு நிலமும்
******
பறவை சினேகிதம் கைகூட
வானத்தை உருவாக்காதவன்
கூண்டிற்குள் அடைக்கிறானென
தலைக்கு மேலே எச்சமிட்டு
பறவையெனில் வானம்
வானமெனில் பறவையென
முணுமுணுத்தன
*****
No comments:
Post a Comment