Friday, 4 November 2016

கசப்பு பத்து

கசப்பு பத்து
*****
ஒவ்வொரு முறையும்
தொண்டைக்குழியோடுதான் இருத்துகிறேன்
மிக லாவகமாக நீ எனக்களிக்கும்
நஞ்சை
நீ அமிர்தவர்சினியாகவே
ஊரெல்லாம் அடையாளமாகிறாய்

*****
அப்பெரும் துயரமொன்று
சுற்றி வளைக்கிறது
சற்று நேரத்திற்கு முன்
ஒரு கையள்ளி இனிப்பைப்
பரிசளி்த்தவன்
தன் வரத்தைப் பரிசோதிக்கவே
கசப்பையே இனிப்பாக்கினானெ
கேலியில் திளைக்கிறது
அறுசுவைகளில் ஒன்று
*****
தனக்கு எதுவுமே தெரியாதென்று
உரத்த குரலில் வாக்குமூலமாகும்
நெருக்கமான அன்பொன்றின்
துரோகங்களில்
வழிகிறது ஒவ்வொரு சொட்டாக
வாழ்வு முழுக்க சுவைப்பதற்கான
கசப்பின் சுவை
****
இரவு கசப்பை உருவாக்கிறது
பகல் அதை ஒரு கோப்பை மதுவாக்குகிறது
பரிபூரணங்களில் மூழ்கி மூழ்கி
நனைத்தெடுத்த அச்சுவைதான்
தன் கொடுங்கரங்களால்
வாழ்வின் இறுதிவினாடியை
மரணமெனக் கொண்டாடுகிறது

******
புகார்களற்றவனின் கரங்களில்தான்
நெறிபடுகிறது யாரோ ஒருவனின் சுயம்
ஏமாந்த ஒருவனின் தோளிலேறி
தேர்பார்க்கும் ஒருவன்தான்
தானே கடவுளின் பிம்பமென
பிதற்றித் திரிகிறான்
****
வஞ்சக சொல்லொன்றைத்தான்
தலைவாழை இலையில் பரிமாறுகிறாய்
மூன்றுவேளை பசியாற்றி
மூச்சுள்ள காலம்வரை
உபசரிப்பேனென
ஊரெல்லாம் கல்வெட்டாக்குகிறாய்
******
ஒவ்வொரு முறையும்
உன் விருந்தில்
தாராளமாக்கப்படும் பெருங்கசப்பை
இனிப்பெனச் சுவைக்கும்படி
வாள் சுழற்றும்
உன் அன்பு
காலவிசமாக்கி
இனிப்பாக்குகிறது மரணத்தை
-***
மறுபடியும் மறுபடியும்
தேனில் குழைத்த அதிகாரத்தை
என் மீதான பெரும் நம்பிக்கையென
திணிக்கிறாய்
காறி உமிழுமென்னை
செயலற்றவனென கூசாமல் கூறும்
உன்னைத்தான்
என் தெய்வமென கொண்டாடும்படி
வாய்த்திருக்கிறது வாழ்க்கை
******
என் கடிகாரம்தான்
உன் கையிலிருக்கிறது
பிறகென்ன
எல்லா பொழுதுகளும்
உன் வசமாகிறது
பசித்த பொழுதெல்லாம்
தவறாமல் ஊட்டுகிறாய்
ஒரு உருண்டை பெரும் நஞ்சை
*****
இந்த வாழ்வைக் கொடையென
கொண்டாடும்படி
வற்புறுத்துகிறாய்
கோடையை மட்டும்
விளைச்சலாக்கும் நிலத்தை எனக்கென
பரிசளிக்கும் நீதான்
எனது பருவகாலங்களை
பகடிசெய்கிறாய்
உனக்குள் இருக்கும் நான்
எப்போதும் கைப்பிடி விதை
*-***

No comments:

Post a Comment