Tuesday, 24 August 2021

கவிதை

நான் ஒரு யானை வளர்க்கிறேன்
இரவுதான் அதை மேய்ச்சலுக்கு அனுப்புகிறேன்
அதை  அது எதிர்ப்பதே  இல்லை
பிரதிபலனாக 
நான் உறங்கியபின்
தன் விளையாட்டுப் பொருளாக
என்னையே பயன்படுத்துகிறது
 விடிந்ததும்  இதை
அந்த யானைதான் மிக கேலியுடன் 
என்னிடம் கூறிக்கொண்டே இருக்கிறது
யானைதான் என்னை வளர்க்கிறதென
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறது
இரவொரு மதங்கொண்ட யானையென
குறி சொல்லிப்போகிறார் கோடங்கிக்காரர்.
***

கவிதை

இடைவிடாமல் குரைத்தபடி இருந்தது
எதைப் புரிய வைக்க முயல்கிறதென புரியவே இல்லை
தன் கழுத்துப்பட்டையை உற்றுப்  பார்க்கிறது
பிறகது  என்ன செய்வதென அறியாமல்
வானத்தை நோக்கி பாய முயற்சிக்கிறது
ஒவ்வொரு  முறையும் எனை 
தன்  குரைப்பால் சீண்டும் அதற்கு
பசியாகத்தான்  இருக்குமென
இல்லாத  ரொட்டித் துண்டுகளை
பிய்த்து வீசுகிறேன்
வெட்டார வெளியைப்  பார்த்து முறையிடுகிறேன் 
தொடர்ந்தபடியே இருக்கிற  இந்தக் குரலொலிக்கென
புரண்டு படுத்த இடைவெளியில்
கலைந்த கனவின் தொடர்ச்சியாய்
தொடங்கியது
மன நாயின் குரைப்பொலி
***
க.அம்சப்ரியா

கவிதை

" கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல..
முணுமுணுத்தபடியே உறக்கத்திலிருந்து விடுபடுகிறாள்
பொழுது முழுக்க தன்னிடமிருந்து பிரிந்திடாத  வரிகளை
இசைத்தபடியே எல்லா வேலைகளையும்
செய்து முடிக்கிறாள்
மாலைப் பொழுதில் துணைக்கு வந்து சேர்கிறது
" காதலின் தீபமொன்று  ஏற்றினாளே
என் நெஞ்சில்..."
பிறகு கண்ணீரற்ற  தனக்கான பாடலொன்றை
தானே  இசைக்கத் துவங்கினாள்
அதை யாரிடமும் சொல்வதில்லையென
சத்தியம் வாங்கிக் கொள்கிறாள் தன்னிடமே
***
க.அம்சப்ரியா

கவிதை

பகலுக்கு  நானொரு விளையாட்டுப் பொருள்
தூக்கி வீசி விளையாடுகிறது
உருட்டி உருட்டி விளையாடுகிறது
துரத்திப் பிடித்தும் விளையாடுகிறது
விளையாடி அலுத்து  சின்னஞ்சிறு புழுவாக்கி
இரவுக்குத் தருகிறது
மிகு  கருணை கொண்ட இரவோ
தன்  அலகால் புரட்டிப் புரட்டி விளையாடுகிறது
  எப்போதும் உயிர்த்திருக்கும்படியாய்
வரம் கொடுத்தது  யாரென்று தெரியவில்லை
***
க.அம்சப்ரியா