ஒவ்வொரு வேராக வெட்டும்
ஒருவரோடுதான் காலமெல்லாம்
வாழ்கிறது மரம்
குவளை தண்ணீரோடு
தன்னைக் கொண்டாடிக்கொள்ளும்
அவனை நம்பி அமர்கின்றன பறவைகள்
அவனை வேட்டைக்காரனென்று
புரிவதற்குள் வீழ்கிறது மரம்
க .அம்சப்ரியா
Saturday, 23 April 2016
கவிதை
Saturday, 9 April 2016
கவிதை
மலைவனச் சிறுமி தன் கூந்தலை
பெருமரங்களின் முதிர்பட்டை வண்ணங்களால் சாயமேற்றுகிறாள்
யாரும் அணுகாத மலர் வேலியொன்றை
தனக்கு ஒவ்வாத வானதேவதைகளின் பெருங்குரல்களால் அமைத்துக் கொள்கிறாள்
இன்றோ நாளையோ தன் வாழ்வின்
இன்னொரு பருவத்தை எதிர்நோக்கும் தன்னை
பருவங்களின் ரட்சகியாக உருமாற்றுகிறாள்
பிரியமான நதியை உற்று நோக்குகிறாள்
முந்தைய முற்றிய கனவை காவு கொடுத்த
தன் சகோதரி ஒருத்தியின்
உதிரம் ஓடிக் கொண்டிருந்தது அதில்
*************************
க.அம்சப்ரியா
Saturday, 2 April 2016
கவிதை
உங்களுக்குப் பயனாகுமென
இந்தக் கவிதையின் ஒரு வரியை
ரத்தம் ஒழுக ஒழுக ஒடித்து
கோடைக் குடையாக்கினேன்
வழியெங்கும் நடந்த
களைப்புத் தீரட்டுமென
இந்தக் கவிதையின் சொற்களை
சிறு கூடாரமாக்கினேன்
இன்னும் எவ்வளவு காலமென
சலித்துக் கொள்ளும்
உங்கள் வாழ்வைக் குதூகலமாக்க
கவிதையின் எழுத்துகளை
கோமாளியாக்கி வேடிக்கை காட்ட
கட்டளையாக்கினேன்
இந்தக் கவிதையால் உயிர்த்த உங்கள் கரங்கள் ஏன்
அரிவாளோடு எதிர்கொள்கிறதென்று
முனகிக்கொண்டே இருக்கிறது
எனதிந்த கவிதை