குருவும். அவனும்
"""
அவன் தான் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். யாரிடம் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தி்த்த போது சட்டென்று ஆற்றங்கரையோரம் வசித்து வரும் துறவி நினைவிற்கு வந்தார்.
பலரும் அவரிடம்தான் கற்றுக்கொள்கிறார்கள். பலரும் பாராட்டுகிறார்கள்.
அவரைத் தேடி அதிகாலையிலேயே சென்றுவிட்டான். குடிலைச் சுற்றிலும் வேலியிருந்தது.நுழைவாயில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
குடிலுக்கு சிறிது தூரம் நடக்க வேண்டி இருந்தது. எப்படியாவது குருவைப் பார்த்துவிடுகிற வேகம் மனதில் இருந்ததால் வேகமாக நடந்தான்.
இவன் சென்ற போது குரு யாரும் அருகில் இல்லாமல் இருந்தது சற்று மகிழ்ச்சியைத் தந்தது.
என்ன வேண்டும் என்று பார்வையே விசாரிப்பது போல கனிவும் அன்புமாக இருந்தது.
" குருவே தங்களிடம் கற்றுக் கொள்ள வந்துள்ளேன்... "
" நல்லதுதான்....நானும் கற்றுக்கொடுக்கத் தயாராகவே உள்ளேன்...வரும் வழியில் நீ ஏதாவது அபூர்வமாகப் பார்த்தாயா...?
குருவின் வினாவிற்கு யோசித்தான். ஒன்றும் நினைவில்லை.
இல்லையென்று கூறினான்.
சரி...நாளை வா..." என்றார்.
அடுத்த நாளும் சென்றான்.
அதே வினா...அதே பதில்..
நாளை வா என்று அனுப்பினார்.
மூன்று நாட்கள் இப்படியே கழிந்தன. நான்காம் நாள் குருவின் வினா தவறாமல் இடம் பெற்றது.
' ஆம்..குருவே ..நான் உள்ளே நுழைந்ததும் ஒரு செடியில் அப்போதுதான் மலர்ந்த முதல் பூவினைக் கண்டேன்...'
இன்று முதல் பாடம் துவங்குகிறது என்றார் குரு.
**"
க.அம்சப்ரியா
No comments:
Post a Comment