Tuesday, 29 June 2021

கவிதையைக் கொண்டாடுவோம் -01

கவிதையைக் கொண்டாடுவோம்
****
கவிஞர் சிற்பி அவர்களின் கவிதைகளில் பயணித்தல் -01
***
கவிதைக்குப்  பருவ காலங்கள்  ஏதேனும் உண்டா? எல்லாக் காலங்களிலும்  காய்த்து கனி தருகிற மரங்களும் இருக்கும். கவிதை மரத்தில்  இலைகள்,கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு என யாவும்  கவிதைகள்தான். பூக்கின்ற காலத்தில் அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என  அங்கும் கவிதைகள்தான். இலை வகைகளை எடுத்துக் கொண்டால் அதுவும் கவிதைகள்தான்.

    நிழலுக்கும் ஒதுங்கலாம். பார்த்து பார்த்து ரசித்தும் மகிழலாம். அதனால்தான் கவிதைக்கு  கவிதை மட்டுமே நிகராகிறது. 

    கவிதைக்குள் தன்னையும் ,தன் உலகத்தை மட்டுமே கண்டறிவதல்ல கவிதை ஞானம். தன் குரலின் வழியே, யாவர்க்குமான மௌனத்தின் திறவுகோலாகவே கவிஞன் தன் கவிதையைக் கண்டெடுத்துத் தரும் திருவிழாவாக கவிதையே மாறுகிறது.  

   அதிகாலை துவங்கி அடுத்த அதிகாலை வரை யாரோ ஒருவரின் சொல் நம்மைத் துரத்திக் கொண்டே  இருக்கிறது. யாரோ யாரிடமோ கூறியதாக அணிவகுக்கும் சொற்கள், சொல்லாத சொல்லைத் தூக்கி வந்து விசாரணை வைக்கும் சொற்கள், கற்பனையில் புனைந்த கபடச் சொற்கள் இப்படியாக அவதூறுகள் எங்கெங்கும் தூசு மண்டலமாகமாக நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன.

   வாழ்வை வாழ்வெனக் கொண்டாடத் துவங்கும் போது இது நிர்பந்திக்கப்பட்ட ஒன்றுதான்

   கைவிடப்பட்ட. வாழ்வின் கணங்களுக்குக் கவிதை ஆற்றுபடுத்தும். இதைத்தான் இறுதியாக நீ செய்ய வேண்டும். அப்படிச் செய்வதே வாழ்வின்  ஞான ஒளி என கவிதைதான் வழிகாட்டுகிறது.

    கவிஞரின் "அவதூறுகள்" தலைப்பிட்ட கவிதைக்குள் நுழையும் போது  கவிதை இப்படிச் சொல்கிறது. நான் இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான்..இப்படியெல்லாம் கற்கள் வீசப்படுவது முதன் முறையல்ல என்று  எதிராளியைப் பார்த்து புன்னகைக்கிறது. 

   அவதூறுகளை கண்டு அஞ்சுவதில்லை. உண்மையில்  அதை எதிர்பார்த்ததுதான் என்று மனதைச் சமநிலைப்படுத்துகிறது வரிகள்

   கொந்தளிக்கும் மனநிலையை எப்படிச் சமாமானப்படுத்துவது? இவையெல்லாம் இப்படித்தான் நடக்கும் என்றும் ,இதற்கு முன்பும் இப்படித்தான் நடந்தது ,அதனால் நீ ஒன்றும் கவலைப்பட அவசியம் ஏதுமில்லை என தோளைத் தடவுகிறது

  கவிதை என்றால் என்ன செய்ய வேண்டும்? இதுதான் நீ எதிர்கொள்ளப் போகும் துயரமென சுட்டிக் காட்ட வேண்டும். அதற்கு வெறும் சொற்கள் போதும். ஆறுதல் கூறலாம். அதற்கு  தலை தடவி சொற்களைச் செலவழிக்கலாம். தீர்வு சொல்ல வேண்டுமே..அதுதான் கவிதை.

  இது எனக்கானதுதான், ஆனால் உனக்குமானது என்று கவிதைக்குள் நுழைகிற யாவர்க்குமான ஒரு கவிதை  ' அவதூறுகள்'

   இந்தக் கவிதை இறுதியாக  கற்பிக்கும் வாழ்வியல் முறைதான் கவிதையை நம்பினால் கைவிடப்படார் என்பதற்கான சான்றாகும்

  இனி கவிதை
""'
அவதூறுகளின் குப்பைக் கூடை
என் மேல் கவிழ்க்கப்படுவது
இது முதன்முறை அல்ல

எனக்கு  அது  புனித நீராட்டுப் போல்
பழகிப் போய்விட்டது
முதலில்  மூச்சுத் திணறலா இருந்தது
இப்போது  சுவாச மதுரமாகிவிட்டது

அட 
இன்றைக்கு  வர வேண்டிய
வசை அஞ்சல்  இன்னும் வரவில்லையே
இணையத் துப்பாக்கி வெடிக்கவில்லையே
முகநூல்  சுடுசரம் பாயவில்லையே
என்று  என் தோட்டத்தில்
கவலை அரும்புகள் கன்றிப்  பூக்கின்றன

ஒவ்வொரு  குப்பை அபிஷேகத்துக்கும்
ஒரு மரக்கன்று நடுகிறேன்
மகிழம் தேக்கு மரமல்லிகை
சந்தனம் தேவதாரு மருது வாகை
வசையின் ஆழத்துக்கு ஏற்றபடி

ஒரு  போதும் 
நடுவதில்லை நான்
எட்டி மரங்களை.

**
 இரண்டெழுத்தில்  உணர்ச்சிகளைக் கொட்டி , எதிர்பார்த்ததை உணர்த்தும் சொல்லாக " அட" என்பது கவிதையை உச்சத்திற்கு நகர்த்துகிறது. 

   எல்லாச் செயல்களுக்கும் ஒரு எதிர்வினை உண்டுதான். கவிஞரின் எதிர்வினை மகிழம் , தேக்கு, மரமல்லிகை, சந்தனம் ,தேவதாரு, மருது வாகை என வசையின் ஆழத்துக்கு ஏற்றபடி நடுவேன் என்கிறார்

   எத்தனையோ மரங்கள் இருக்க இந்த குறிப்பிட்ட மரங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதே  கவிதை நுட்பம். வாசனை, உறுதி,மருத்துவ வகை என பயன் உள்ளவையாக  தன்னை கவி மனம் வெளிப்படுத்துகிறது.

   இறுதியாக இப்படி கவிதை தன்னை வெளிப்படுத்துகிறது.

   ஒரு போதும்
   நடுவதில்லை நான்
    எட்டி மரங்களை.

  -  இது கவிதையின் வழியாக அறத்தைக்  கற்றுத் தருதல்தான்.  காலம்  நமக்கு அவதூறுகளைத் தரும் போது எதிர்வினையாக நாம் அபூர்வ மரக்கன்றுகளை நடுவோம். எட்டி மரங்களைப் புறக்கணிப்போம்.

   கவிதையைக்  கொண்டாடுவோம்.

***

No comments:

Post a Comment