Saturday, 22 July 2017

சுய விபரம் க.அம்சப்ரியா

க.அம்சப்ரியா
பில்சின்னாம்பாளையம்
சமத்தூர் 642123
பொள்ளாச்சி
9095507547

கவிதை நூல்கள்

*சூரியப்பிரசவங்கள்
*யாராவது வருகிறார்கள்
*உங்களிடம்  மறைப்பதற்கு  எதுவுமில்லை
*இரவுக்காகங்களின்  பகல்
*என்  இரவு ஒரு  தேநீர்  கோப்பையாகிறது

கட்டுரை நூல்கள்

*பறத்தலை விரும்பும் பறவைகள்
*காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்
*சொற்களில் ஒளிந்திருக்கும் மௌனம்

சிறு நூல்கள்

*கவிதைக்குள்  அலையும் மனச்சிறகு
*பூனையின்  கடவுளும்  கவிதைப்பறவையும்

Tuesday, 20 June 2017

கவிதை

நள்ளிரவில்  பயணிக்கிறது   குதிரை
தாறுமாறாக ஓடும் அக்குதிரைக்கு
பகல்  நீண்ட தூரத்திலிருக்கிறது
வழிப்போக்கனின்  கனவுகளை
தின்று பசியாறுகிறது
காலமெல்லாம்  ஓடுதலே  பிறப்பென
சாபத்தை வரமென பெற்ற குதிரையில்
பயணிக்கத் துவங்குகிறேன்

Wednesday, 15 February 2017

காணவில்லை

பெயர்: உறக்கம்
ஊர்.    :யாதும் ஊரே யாவரும் கேளிர்
அடையாளம் :
1.  கடைசியாக ஒரு காதல் நிராகரிக்கப்பட்டதன் தழும்பு
2      ஒரு துரோகத்தை எதிர்கொண்ட வெட்டுக்காயம்
3.இழந்த பதவியின் பேருழைச்சல்
4 .எதையும் தாங்கிக் கொள்ள இயலா எளிய நிலை
5 உடலெங்கும் ஏதோ ஒரு வகையான நமைச்சல்

இறுதியாக பார்த்த போது அவரவரின் சாயலோடு இருந்தது

Saturday, 4 February 2017

காலமாகவும் அகாலமாகவும் அவனிருக்கிறான் .
பூக்கள் அவன் விரும்பியபோது பூத்தன
வெட்டாரவெளியில இல்லாத இடத்தில்.
அவன் உங்களுக்கும் சேர்த்தே
சொர்க்கமொன்றை உருவாக்குபவன்
அவன் பெற்றெடுத்த வரிகளும் எழுத்துகளும்
இன்னும் ஒரு யுகமேனும் மூச்சாக இருக்கும்
அவன் உருவாக்கும் நகரங்களில்
அதிகம் நாம்தான் புழங்குகிறோம்
பூமியில் எப்போதும் வாழும் அவனை
இறந்துவிட்டதாக கூறாதீர்கள்

5-02-2017

Friday, 27 January 2017

நீயும் நானும்
**********
கையகல இடத்தில் கூடுதலாக
மண்குவிந்த வரப்பிற்காக
ஓயாமல் மல்லுகட்டினோம்
யாரோ ஒருவனால் நிலமே அபகரிப்பட்டதறியாமல்

சற்றே பொறுமையாக இருந்திருக்கலாம்
கூடுதலாக அரைமணி நேர
கெடுவு தண்ணீருக்கென
குடுமி பிடித்துக்கொண்டோம்
நம் ஆறும் குளமும்
கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதறியாமல்

உன் மாடும்  எருமையும்
என் வயலுக்குள் வந்ததற்காக நானும்
ஆடுகள் சில உன் விதை வயலுக்குள்
வந்துவிட்டதற்காக நீயும்
உள்ளூர் பஞ்சாயத்தில் நின்றிருந்தோம்
டிராக்டர்களுக்குள் இவைகள்
மிதிபடப்போகும் அவலத்தை உணராதவர்களாக

ஒரு நாள் நின்றிருந்தோம்
முப்போக விளைச்சல்காரர்களாகிய நாம்
ரேசன் கடை வரிசையொன்றில்

27-01-2017

Wednesday, 18 January 2017

வளர்ப்பு பிராணிகள்

நம்மோடு இருந்து மகிழ்வூட்டும்
கண்ணீரை ஒற்றியெடுக்கும்
துவள்கிற போது தோள்கொடுக்கும்
என்றெல்லாம் வளர்க்கப்படும்
இந்த வளர்ப்புப்பிராணிகள்
மெதுவாய் பிய்த்துத்தின்னத் தொடங்குகின்றன நம்மை

Sunday, 15 January 2017

பொங்கல் திருவிழா

திருவள்ளுவர் தினவிழாவில் தெருமுனைப் பிரச்சாரம்