கவிதையைக் கொண்டாடுதல்
***
கவிஞர் சிற்பியின் கவிதையில் பயணித்தல் -09
*****
க.அம்சப்ரியா
***
காட்டில் மலர்ந்த கவிதைப் பூ
*******
காட்சிகளை விவரித்தல், காட்சிகளை விரித்தல் இவை கவிதையின் கூறுகளில் ஒன்று. இந்தக் கூறுகள் கவி மனம், தான் கண்ட காட்சிகளை, காட்சி வழி பொங்கும் அனுபவங்களை யாரிடமாவது பகிர்ந்திட தயாராகும். ஆனால் அது குறைந்த பட்ச அனுபவ பாதிப்பெனில் முழுமையான கவிதையாவதில்லை. வெறும் அனுபவமென்ற அளவில் தேங்கிவிடும்.
காணும் காட்சிகள் யாவும், சில மணி நேரங்களோ, சில நாட்களோ, சில வாரங்களோ, ஆண்டுக் கணக்கிலும் கவிதையாவதற்கான காலத்தை எதிர்பார்த்திருக்கலாம்.
கவிதைக்கான வாசகரை ,எந்தக் காட்சிக் கவிதைக்கான வர்ணனை ஈர்த்ததோ அந்தக் காட்சியை நேரில் தரிசிக்கத் தூண்ட வேண்டும். அப்படித் தூண்டப்பட்ட மனம் ஆழ்மனதின் ஓரத்தில், வேறொரு அதே போலான காட்சியில், முந்தைய கவிதையில் கண்ட காட்சியைப் பொருத்திப் பார்க்கும்.
கவிதையின் முழுமையான வெற்றி அங்குதான் துவங்குகிறது. தான் காண நினைத்த காட்சியை, கவிதைக்குள் காணும் அனுபவம். தான் ஏற்கனவே கண்ட காட்சியைக் கவிதைக்குள் காணும் பேரனுபவம் - இவை இரண்டையும் இரு நிலை வாசகரையும் ஈர்த்து தனக்குள் வசப்படுத்துகிற ஆற்றல் கவிஞர் சிற்பியின் கவிதைகளில் காண்கிறோம்.
எழுத்துகளின் வழியே கூறப்படும் காட்சிகள், மனக்கண்ணில் விரிய வேண்டுமெனில் கவிஞனின் சொற்கள் தேர்ந்தெடுத்த சொற்களாக, தேர்ந்தெடுத்த வரி கட்டமைப்போடு, அடுத்தடுத்த பத்தி விவரணையோடு அமைய வேண்டும். இத்தனையும் செய் நேர்த்தி வகைக்குள் அடங்கி, கவிதையை கவிதையாக மட்டுமே காட்டாமல், பல்லுயிர் பெருக்க விழிப்புணர்வாக, ஒரு நாட்டின் அரணாக இருக்கும் காடு சூழ் உலகைக் கொண்டாடுவதாக அமையும் போது மேலும் கவிதை உச்ச நிலைக்கு வந்துவிடுகிறது.
காடு தலைப்பிட்ட கவிதை பல்லுயிர் கொண்டாட்ட கவிதையாகவும், காட்சி விவரிப்பில், காடு தேடிச் செல்லத் தூண்டும் கவிதையாகவும் நம் மனதில் பயணிக்கிறது. உவமைகள் கவிதையைத் துளித் துளியாய் பருகத் தூண்டுகின்றன. காடெனில் பேருலகம்தானே..கடந்து தீரா பயண வழிக்குள் எதையெல்லாம் காண வாய்த்ததெனக் கூறுதல் சிறு துளி நீரனுபவம்தான்.
இனி "காடு" கவிதை
அடிவானம் கூறும் கொம்புகளோடும்
தீக் கங்குகள் புகையும் கண்களோடும்
புதரிலிருந்து காட்டும் பசு பாய்ந்த போது
அதன் வாலில் தொங்கியது காடு
யானைக்கன்று நழுவ விட்ட மூங்கில்
ஓடையில் முழுகியெழ
ஊஞ்சலெனப் பற்றி மேல் ஏறும் மந்தி
கம்பூன்றித் தாண்டும் வீரனாய் மாறும்
கொம்புகளால் நிலம் கிளைத்துக்
கிழங்கு அகழ்ந்தெடுக்கும்
வனங்களின் ஆதிக் குடியான காட்டுப் பன்றி
யானையின் மூதாதை என்று நிரூபிக்கும்
தன்னிலிருந்து சுரந்து
தொலைப் பயணம் செல்லும் அருவியை
வழியனுப்பும் காடு பனித்து விசும்பும்
மகளைப் பிரியும் தாயெனத் தவிக்கும்
இரவில் புதிர்களின் உலகமாகும் காடு
பகலில் மாந்திரிகப் புத்தகமாய் விரியும்
அடர் வனம் முழுதும் அறிந்தவர் யார் என
ஏளனம் புரிந்து சிரிக்கும்
ஒரு காட்டுப் பூ
***
காட்டுயிர்களின் மேலதிக பண்புகளாலும் , காடு என்கிற சொல்லுக்குள் விரிந்திருக்கும் பேரதிசியங்களும் கவிதைக்குள் வனத்தைக் காணத் தூண்டுகின்றன.
இரவில் புதிர்களாகும் காடு என்கிற கவிதை வரியைப் போல கவிதையும் புதிர்தான். அவசர வாசிப்பில் ஒரு அழகைக் காட்டும். நின்று நிதானித்தால் நாம் மட்டுமே உணரும் பேரழகைக் காட்டும். காட்டுப் பூ என்பது, ஒற்றை இழையா? அகன்ற வாழ்வனுபவம் அல்லவா? ஆரவாரங்கள், திறன் காட்டுதல்கள், வேடிக்கை பகிர்வுகள் யாவற்றையும் காட்டுப் பூ உள்வாங்கிக் கொண்டுதானே காட்சியாகின்றது.
அடர் வனம் முழுக்க அறிந்தவர் யாரென கவிதையும் மெலிதாகப் புன்னகைக்கும்.
**