**************************&**
வாழ்வின் கடைசி மனிதரும் தம்மைக் கைவிட்டதாகவே பலரும் நினைக்கிறார்கள்.உலகில் கடைசி காதலோ,கடைசி நட்போ ,கடைசி மனிதரின் நெருக்கமென்றோ இல்லை என்பதை பலரும் உணர்ந்து கொள்வதற்குள் வாழ்க்கையை ஒன்றுமற்றதாக மாற்றிக் கொள்கிறார்கள்.
தேவையற்ற ஆசைகள்,வீணான நம்பிக்கைகள்,ஒருவரின் மீது அளவுகடந்து வைக்கிற நம்பிக்கை ,எதையும் முன் யோசனையற்று உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிற அறியாமை இவைகள் ஏமாற்றங்களையும் துயரங்களையும் வீடு தேடிவந்து பரிசாக்குகின்றன.
தோல்வி என்பதே உலகில் இல்லை.இன்னும் ஒரு முயற்சிக்கு தேவையான ஆலோசனைகளும்,தோல்வியென்று மனம் தவிக்கிற தருணங்களில் தோள்தட்டி நம்பிக்கையூட்டும் சில சொற்களுமே தேவை.
துர்பாக்கியமான நிலையாக யாரை இந்த மனம் நம்பியதோ அந்த மனம்தான் நமக்கான துரோகத்தை விருந்தாக தருகிறது.இப்படி நினைக்கிற போது ஆழ்மனதின் எச்சரிக்கையை புறக்கணித்திருப்போம்.
காதலென்று கையேந்துகிற இதயமொன்று பிறகொரு சமயம் நம்மை கைவிடப்போகிறது எச்சரிக்கையாக இரு என்றும்,வியாபாரத்தில் இலாபம் பார்க்க இணைந்து பணியாற்றலாம் வா என்று அழைக்கிற அழைப்பில் ஒரு வஞ்சகம் ஒளிந்திருக்கிறது,இது வேண்டாம் என்று உள் மனக்குரல் எச்சரித்த போதும்,இந்தக்காதல் இறுதியில் கண்ணீரில்தான் முடியும் என்று உள்ளொளி கவனப்படுத்திய பின்னும் நம் உணர்ச்சி மனதின், முந்திக்கொள்கிற தன்மையால் வீணாக கவலைகள் வந்து சேர்கிறது.
இவைகளை உணர்வதற்குதான் யாரோ ஒருவர் எழுதிவைத்த புத்தகங்களும்,யாரோ ஒருவர் நிகழ்த்திய உரைகளும் நமக்கு பெரும் வழிகாட்டும் தீபங்களாக விளங்குகின்றன.
ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக்குள் பலபல தோல்விகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் திறக்கப்படுகின்றன.வெற்றிக்கான விதைகளை எந்தப்பருவகாலத்தில் விதைக்கலாம் என்பதை சொல்லித்தருகின்றன.மனதை சலனப்படுத்துகிற களைகள் எப்போதெல்லாம் செழிக்கத்துவங்குகின்றன என்றும்,அவற்றை எந்தக் களைக்கொல்லியால் அகற்றலாம் என்பதையும் சொல்லாமல் சொல்கின்றன.
நாம் வாழ வேண்டிய தேவை நமக்கு இல்லாமல் போனாலும் ,நம்மைப்போன்ற யாரோ ஒருவரின் வாழ்விற்கு பற்றிக் கொள்ள ஒரு பிடியாக இருக்க வாய்ப்புண்டு.
ஆறுதலுக்கு ஒரு சொல்லுமற்று ஏங்கிக்கிடக்கற ஒருவர்க்கு ஒரு மலையளவு சொற்களை அன்பளிக்க முடியும்.
நமக்கு நாமே போட்டுக்கொள்கிற வீணான கர்வவேலிகளையும்,நமக்கு நாமே உருவாக்கிக்கொள்கிற பொய்க்கதவுகளையும் அகற்றும் போதுதான் நமக்குப்பிடித்தவர்கள் தாராளமாக உள்ளே வருகிறார்கள்.
நம்மால் பயனடைய உலகின் ஒவ்வொரு தெரு முனையளவிலும் ஒருவர் காத்திருக்க இனி யாருமில்லை என்பது போல மரணத்தின் கதவுகளை நாமே இனியும் தட்டலாமா?பிறந்தவர்கள் யாவரும் ஒரு நாள் இறந்தே தீரவேண்டும் என்பது இயற்கைவிதியாக இருக்கும் போது மரணத்தின் கதவுகளை நாமாக வலிய வலிய தட்டவேண்டிய அவசியம் என்ன?இத்தனை பேர் நடந்து போகும் தெருவில் நம் சொல்லுக்கு மதிப்பளிப்பவரைத் தேடாமல் நாமே விரக்தியில் தொலைந்து போவது அறியாமையல்லவா?
தற்கொலை வாழ்வின் இறுதித் தீர்வல்ல.வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று துணிகிற ஒவ்வொரு வினாடியும் நமக்குள் பூத்துக்குலுங்கப்போகிற வசந்தகாலத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் எழுத்தாக துவங்குகிறது.நம்பிக்கையால் உருவாகிற எழுத்துகள் சாதனை வாக்கியங்களுக்கு அச்சாரமிடுகின்றன.
சாதிக்கத் தூண்டும் சொற்கள் வாழ்வின் ஆற்றல் மிகு வரலாற்றை எழுதத் துவங்குகின்றன.
*******
*******