Saturday, 7 May 2016

எனக்குப் பிடித்த கவிதைகள்

எனக்குப் பிடித்த கவிதைகள்
******-**********************

  ஒரு கிளியாக இருந்திருந்தால்
  வானத்தின் அருமை தெரியும்
   என்கிறாய்
   இது நெல் தின்னும் கிளி
         
               ** உமாமோகன்****
       (துயரங்களின் பின்வாசல்)
********************************
            என்று,,,,
        ************
உன் நிர்வாணம்
உன்னை ஏன்
இவ்வளவு பயமுறுத்துகிறது?
அந்தரங்கமாக குளியலறையில்
மேலெங்கும் நீர் வழிகையில்
குளிரான குற்றவுணர்வின் ஈரத்தில்
உன் கண்ணீரின் வெதுவெதுப்பு கலக்கிறது
அறுவை சிகிச்சை மேசையில் படுத்தபடி
ஆடைகள் அனைத்தையும்
களைந்து விட வேண்டாமென
மீண்டும் மீண்டும் இறைஞ்சுகிறாய்
உன் வஸ்திரங்கள் அனைத்தும்
உன் உடலின் அடர்வாசத்தை
காற்றெங்கும் நிரப்புகின்றன
ஒரு கலவியின் துவக்கத்தில்
உன்னால் கைவிடப்பட முடியாத
உடைகளை வைத்துக் கொண்டு
என்ன செய்வதென்று தடுமாறுகிறாய்
நான் அறிந்து கொள்கிறேன்
உன் உடலை அல்லாது
நீ வேறு எதற்கோ அஞ்சுகிறாய் என்று
வேறு எதையோ மறைக்க விரும்புகிறாய் என்று
         
        *****சம்யுக்தா மாயா****
(டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு)
************----------**********------
     உன் கோரைப் பற்களுக்கும்
     கூர்நகங்களுக்கும்
     நடுவே சிக்கித் தவிக்கும்
     ருதுதன்மை அடையா
     சதைப் பிண்டத்தை
     கொன்று தின்ன
      உன் காமத்தால்
      நின்றுபோனது
      அந்தச் சிறுமியின்
      பூப்புநன்னீராட்டுச் சடங்கு.

               கீதாபிரகாஷ்
              ***-*************
(ஜனுக்குட்டியின் பூனைக் கண்கள்)

               ** பிடித்த கவிதை வரிசை இனியும் தொடரும்**

Tuesday, 3 May 2016

கவிதை

அகாலத்தில் இறந்தவன்
***************************
பள்ளியிலிருந்து திரும்பும்
தன் குழந்தைகளுக்கென
முத்தங்களை வைத்திருந்தான்

ஊடலின் இறுதியென
ஒரு அணைத்தலை
எதிர்பார்த்தபடியிருந்தான்

வாங்கிய கடனில்
வட்டியாவது செலுத்தி
மானம் காத்திடவென
சில நூறு ரூபாய்களோடு
சமாதானச் சொற்களையும்
சுமந்தபடியிருந்தான்

நண்பனின் இல்ல திருநாளுக்கென
மனதிற்குள் ஒரு
பயண ஒத்திகையில் இருந்தான்

யாரோ ஒருவரின்
ஆறுதலுக்கென
சில பகிர்தல்களையும்
தன் சட்டைப் பையில் வைத்திருந்தான்

அவனின் விருப்பங்களுக்கு
இடமளிக்காத ஒன்று
தனக்கான விருப்பத்தை நிறைவேற்றிப் போகிறது

Sunday, 1 May 2016

வெளியே ஓர் உலகம்

திருச்சியிலிருந்து வெளியாகும் துடிப்பு இதழில் வெளியான சிறுவர் கட்டுரை
*****************க.அம்சப்ரியா****
   அண்மையில் ஒரு கவிதையை
வாசித்தேன்.சற்று சுருக்கமாக குழந்தைகளின் மனநிலையைத் தெளிவாக்குவதாகவும்,சுவையாகவும் இருந்தது
     
    குழந்தைகள் பள்ளிக்கு
     கால்களோடு செல்கிறார்கள்
    றெக்கைகளோடு
    வீடு திரும்புகிறார்கள்
                  செங்காந்தன்
      வகுப்பறைகள் குழந்தைகளுக்கு வெறுப்பாகிட முக்கிய காரணம் மாற்றமில்லாத.எப்போதும் நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட கூண்டுக்கிளிகளாக இருப்பதுதான்.ஓராண்டு காலம்,அதே வகுப்பறை,ஏறக்குறைய அதே ஆசிரியர்கள்,அதே மணியோசை.இயந்திரங்களாகிப் போனதால் வகுப்பறையும் கற்றலும் சலிப்பாய் மாறியிருக்கின்றன.
        நமது பாடத்திட்டங்கள் இப்போது செயல்முறை வழிக் கற்றலுக்குத் தயாரான பின்பும்,மாணவர்களின் கற்றல் ஆர்வம் கூடுவதில்லை.இதை நாமே மாற்றிக் கொள்ள இயலுமா?இயலும்தான்
       நம்மைச் சுற்றி இருப்பவற்றை அறிவதுதான் அது.எதையெல்லாம் கற்றுக் கொள்ள இயலும்?
      ஆசிரியரிடமும்,கல்விக்கூடங்களிலும் கற்றலின் துவக்க நிலையைத்தான் அறிகிறோம்.கல்விச் சாலைகளின் வெளியே விரிந்து பரந்துள்ள வானமும் மண்ணும்தான் கற்றலை முன்னெடுத்துச் செல்கின்றன.சிறந்த ஆசிரியராக இயற்கை ஏராளமான பாடங்களைக் கற்றுத் தருகிற ஆசிரியராக காத்திருக்கிறது.கற்றல் ஒரு தொடர் நிகழ்வு என்று கூறக் காரணமும் இதுதான்.
         நமக்கான கற்றலை நாமே சுவையாக்கிக் கொள்ள எளிய வழி ஒன்று இருக்கிறது.அது மக்களைத் தேடிச் செல்கிற கல்வி.வறுமையைப் பற்றி அறிந்து கொள்ள கூகுளில் தேடிக் கண்டடைகிற உண்மையை விட .களப்பணியில் கண்டடைகிற வாழ்க்கைதான் உண்மையானது.செழிப்பைப்பற்றி அறிவது என்பது எது செழிப்பென்று உணர்வதுதான்.
         மாணவர்களின் விடுமுறை தினங்கள் இப்போது தொலைக்காட்சிப் பொழுதுகளாகவோ,தனிப்பயிற்சிப் பொழுதுகளாகவோ.மீறிப்போனால் சுயமாக செயல்படுகிற மாணவர்கள் ஏதேனும் ஒரு காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதோடு நின்றுவிடுகிறது.
       நாம் சற்றே பாதையை விரிவாக்கினால் நம்மைச் சுற்றிலும் ஒரு பேருலகம் விரிந்து கிடப்பதைக் காணலாம்.
      அவரவர் கிராமங்களே சுற்றுலாத்தலங்களாக விரிந்து கிடப்பதை இன்றைய சிறுவர் உலகம் மெதுவாகத் தொலைத்தபடியிருக்கிறது.
        விவசாயம் சார்ந்த பல தொழில்கள் நம் கிராமங்களில் இருந்தும் ,நம் சிறுவர்கள் அது பற்றிய எந்த அடிப்படை அறிவும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.வகுப்பறைகள் யாவற்றையும் அபகரித்துக் கொண்டதே காரணம்.
          வருகின்ற விடுமுறைகளைக் கிராமங்களின் வயல்வெளிகளுக்கு நகர்த்தத் தயாராவோம்.அந்த விடுமுறை தினங்களே உண்மையான கற்றலின் துவக்கமாகும்.
      வயல்வளிகளில் அறிந்து கொள்ள பல்வேறு பாடங்கள் அமைந்துள்ளன என்பதற்குச் சான்றாக அமைந்த நிகழ்வு ஒன்று எனக்குச் சரியான பாடமாக அமைந்திருந்தது.
       பள்ளிச் சிறுவர்களை அவரவர் கிராமங்களில் என்ன மாதிரியான உணவுப் பொருட்கள் விளைகின்றன என்பதை அறிந்து கொள்ளச் செய்ய ஏற்பாடு செய்த களப்பயணம் அது.
       எனது பள்ளிக் காலத்தில் இருந்த கிராமங்களில் விளைந்த உணவுப் பொருட்களில் ஒன்றிரண்டு கூட இப்போது இல்லை என்பது அதிர்ச்சியாகவே இருந்தது.எங்களின் விவசாய நிலம் மிக மிக குறைவானது.அதில் முன்பு தக்காளி,முள்ளங்கி,கொத்துமல்லி,வெங்காயமென்று ஒரு குடும்பத்திற்கான அடிப்படைக் காய்கறிகள் யாவுமே இருந்தன.மீதமிருப்பவற்றை நானும் நண்பர்களும் ஊருக்குள் விற்பனை செய்யப் போவோம்."தக்காளி....தக்காளி...வாங்கலையோ தக்காளி..." என்றும்,தயிர் வாங்கலையோ தயிர் என்றும் கொத்துமல்லியோவ்...கொத்துமல்லியோவ்"   என்றும் கூவிக் கூவி விற்ற தெருக்கள் இப்போது வெறும் தெருக்களாக இருக்கின்றன.
       உள்ளூரின் விளைச்சல்  உள்ளூரிலேயே பயன்பட்ட காலமாக இருந்தது.வயல் வயலாகச் சென்று சேகரித்த கீரைகள்,மிகக் குறைந்த விலையில் விற்ற கீரைக்காரம்மாவின் பிரியங்களால்
நனைந்த தெருக்கள் இல்லை.
     விவசாயக் குடும்பம் சார்ந்த சிறுவர்கள் மாடுகளைக் குளிப்பாட்டுவது,பால் கறப்பது,தீவனம் தயார் செய்வது என்று சிறப்பான முறையில் செயல்படுவதைக் கண்டிருந்தேன்.அவர்களை அறியாமலே மாற்றுக் கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
      நமது பாடப்புத்தகங்களில் இருக்கும் பெருங்குறையே உள்ளூர் வளங்களை அறிமுகப் படுத்தாதே!
       விவசாய நிலங்கள் குறையக் குறைய தேசத்தின் வளம் குறைகிறது என்பதையும் சாதாரண மக்கள் மறுபடியும் வெகு சாதாரண மனிதர்களாக மாறியபடி இருக்க அடிப்படைக் கல்வியை யாரும் கற்றுக் கொள்ளாததே காரணம்.
      கிராமங்களை நோக்கி நமது மாணவர்கள் பயணிக்கிற போது புதிய புதிய அனுபவங்கள் கற்றுக் கொள்ளக் காத்திருக்கின்றன.
     வேலிகளில் கனிந்து காத்திருக்கிற சூரிப் பழங்களையும்,கள்ளிப் பழங்களையும்  அறிந்து கொள்ள அவ்வப்போது வேலியோரப் பயணங்களை மேற்கொள்ளுங்கள்.
      பனைமரக் காடுகளையும் நுங்கு வண்டிகளையும் தரிசியுங்கள்.தச்சுத் தொழிலையும் மரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.பருத்திச்செடிகளையும் நெசவையும் கண்டு கொள்ளுங்கள்.
      வகுப்பறைகள் சலித்து விடுகிற போது அருகில் இருக்கிற நகரத்தின் ஆடம்பரமான உணவு விடுதிக்குச் செல்வதற்குப் பதிலாக குடும்பத்தோடு உங்கள் ஊரின் முக்கிய நீர்நிலைகளைக் கண்டறிந்து,அதன் வரலாற்றைக் கண்டறியுங்கள்.இன்பச்சுற்றுலாவின் உண்மையான பொருளை அறிந்து கொள்ளக்கூடும்.
    ஏரிக்கரைகளில் ,வயல் வரப்புகளில்,தரிசு நிலங்களில் முளைத்துக் கிடக்கிற சாணிப் பூட்டாம் இலைகளையும் ,சீமை எண்ணெய்ச் செடிகளையும் ,தக்காளிச் செடிகளையும் சற்றே கவனியுங்கள்...
       அவைகள் இந்த மக்கள் வாழ்ந்த வரலாற்றை உணர்த்தும் அவைகள் நீங்கள் படிக்கிற வரலாற்றைவிட வேறு ஒரு வரலாற்றைக் கற்றுக் கொடுக்கும்.
      பருவக் காலங்களில் மட்டுமே விளைகிற தர்ப்பூசணியும் கொய்யாப்பழமும் கொடியில் ஒன்றும் மரத்தில் ஒன்றுமாக ஏன் விளைகிறது என்ற கேள்விக்குப் பாடத்தில் கற்கத் தவறிய தாவரவியலைக் கற்றுக் கொள்ளக்கூடும்
      முன்பொரு காலத்தில் நம்மூரில் விளைந்த காய்கறிகளை,ஏன் பெரு வியாபாரக்கடைகளில் மட்டுமே வாங்க நேர்ந்தது என்று யோசித்தால் பொருளியல் புரியும்.
      இனி கிராமத்தின் வயல்வெளிகளில் சுற்றித் திரியுங்கள்.மனம் குதூகலிக்கட்டும்

******************=====*********-