Sunday, 25 December 2016

கவிதை பத்து

பத்து கவிதைகள்
*****"""""**********
கவிதை ஒன்று

இவ்வளவு நாள் அடையாளமறியாத
ஒருவன்தான் இன்று
பெரும் ஆர்ப்பாட்டமாகிறான்
போகிற போக்கில்
நள்ளிரவானாலும்
மலர்ந்துதான் ஆக வேண்டுமென
அதிகாரமாகிறான்
பூதான் சட்டென்று பூ நாகமானேன்

####
கவிதை இரண்டு

கதவை பிராண்டியது நீதானென
சொல்ல வக்கற்ற இரவில்
பெய்த பனியை
மழையென நிரூபிக்க
ஓவ்வொரு துளியாய்
மேகமாக்கினேன்
என் உதிரம் கொண்டு-
பசி தீர்ந்து திரும்புகிறாய்
தூரத்தில் ஊளையிடுகிறது
இருவரின் நரிகள்

####

கவிதை மூன்று
++++

யாரையும் தெரியாத ஊரில்
கடந்து போகும் யாவரும்
யாரோ ஒருவரின் சாயலில்
நெருக்கமாகிறார்கள்
நெருக்கமானவர்களின் மந்தையில்
இப்போதும் தடுமாற்றம்
வழி தவறிய ஆட்டுக்குட்டியாக

+++++

கவிதை நான்கு

++++++

வெகு காலமொன்றும் கடந்திடவில்லை
அடையாளமாக எதையெல்லாமோ
அடுக்கிக் கொண்டிருப்பவரின் முகத்தில்
கைவிடப்பட்டவரின்
பெருந்துயரமிருந்தது
ஒவ்வொரு தெருவிலும்
இப்படியொன்று அலைவதாக
சலித்த புகார் ஒன்றை
ஒப்பிக்கிறான்
சாமக் கோடாங்கி
+++++
கவிதை ஐந்து
+++++
நீங்களும் நிலா பார்க்கிறீர்கள்
நானும் பார்க்கிறேன்
நம்மைப் போல ஒருவன்
சூரியன் என்கிறான்
வேறு வழியற்ற நாம்
ஆமென்று ஏற்கும் நாளாகிறது
விதி வசமாக

கவிதை ஆறு
******
பெருகியோடும் உபசரிப்பு நதியில்
துள்ளும் மீனாகக்கிடக்கிறேன்

*****
கவிதை ஏழு
*****

பூனைகளை மேய்க்குமொருவனை
சந்திக்கும் போது
எலிகளைப் பற்றிப் பாடினேன்
பூனை மேய்ப்பென்பதறியாமல்
பகலில் எலியாகவும்
இரவில் பூனையாகவும் வாழும்படி
சபித்துப்போகிறான்
*****
கவிதை எட்டு
****
மூடப்பட்ட பாதையொன்றில்
கனவைத் திறப்பவர்கள் வருகிறார்கள்
சாயமிழந்த  வண்ணத்துப்பூச்சியொன்று
அலைகிறது அங்கும் இங்கும்
பிறகது அமர்கிறது

****

கவிதை ஒன்பது
****
ஆளரவமற்ற நெடுஞ்சாலையில்
குருதி ஒழுகக் கிடக்கிறது
நள்ளிரவு வரை அழுதபடி இருக்கும்
கனவொன்று
ஒவ்வொரு வாகனத்தின் பின்னும்
ஓடியோடி
சொல்லத் தவிக்கும்
அதன் சொற்களில் ஒன்றிரண்டு
உறங்காதவனின் கவிதைகளில்
தேம்பிக்கிடக்கிறது

****
கவிதை பத்து
***
அலைபேசியின் குரலில்
ஒரு பூவை மலர்த்துகிற பேரின்பம்
வாய்க்கிறது
இத்தனை குரல்களின் பெருங்கூட்டத்தில் ஒரு குரலுக்கு
துர்அதிர்ஷ்டவசமாக
அது ஒரு
தவறிய அழைப்பாகிவிடுகிறது

****