Saturday, 10 September 2016

அம்சப்ரியா பத்து கவிதைகள்

கவிதை பத்து
*********
பிணங்களைச் சுமந்தபடி
ஓடிக்கொண்டிருக்கிறாய்
பால்யம் எடை குறைந்திருக்கிறது
இளமையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாய்
முதுமை கால் இடறி விழுகிறது
யாவற்றையும் சகித்து
ஓடிக்கொண்டிருக்கும் உனக்கொரு
கௌரவம் வாய்க்கிறது
பிணங்களின் நதியென

கவிதை ஒன்பது
********
ஒற்றைக் கிரீடம்தான்
ஆனாலும் கழற்ற மனதற்றவனின்
நிழலில் படுத்திருக்கிறது
மூச்சு வாங்கியபடியாய்
ஒரு சுய பிம்பம்
*******
கவிதை எட்டு
******&
மடிந்த பொழுதை
மடியில் கட்டிக்கொண்டவள்
தேசாந்திரம் புறப்பட்டு
ஆயிற்று வெகு நாட்கள்
ஆனாலும் என்ன
வீட்டைத் திறந்து திறந்து
தேடுகிறாள்
கைமறதியாய் எங்கோ வைத்துவிட்ட
தனக்கான வாழ்வை

******
கவிதை ஏழு
*****
எவ்வளவு காலமாயிற்றென்று
இடைவிடாமல் தேடுகிறாள்
இந்த மக்கள் பெருவழியொன்றில்தான்
தன்பொழுதைக் கொன்று
வேலிக்கு வெளியே வீசினாள்
எல்லோருடனும் ஐக்கியமாகும் ஒருத்தி
விரைவில் மனநோயாளியென
அறிவிக்கப்படுகிறாள்

கவிதை ஆறு
*******
ஒரு காலைப்பொழுது
இவ்வளவு லாகவமாக அமைவதில்லை
ஒற்றைப்பறவை
ஒற்றைக்கிளையில்
ஓராயிரம் வருடங்களாக ஊஞ்சலாடுவதை
கண்ணுற்றதென்னவோ இன்றுதான்
******
கவிதை ஐந்து
******
முடிவுற்றதாக இல்லாத பயணம்
நீள்கிறது இக்கணமும்
ஆயிரம் சொற்கள் சூழ
ஆயிரம் பத்திகள் கொண்டாட
ஆயிரமாயிரம் பக்கங்கள் வாழ்த்தியிருந்த
இந்த வாழ்வு
மௌனித்திருந்தது உரத்த சப்தங்களின் துணையோடு.

கவிதை நான்கு
*******
துயரப்பூக்கள் நிறைந்திருக்கும்
இவ்வனத்தைக் கடக்க
ஒரு ஆரஞ்சுப்பழத்தினைக் கொண்டு
பிரார்த்தனை தொடர்கிறது
வாழ்தல் இப்படியொரு அபத்தமாவென
கெக்கலிக்கிறது
ஆனாலுமென்ன
மரத்திலிருந்து அழைக்கும்
அப்பறவைக்கு என்ன பதிலாவதோ?

கவிதை மூன்று
******
இதுவொரு ஒற்றைச்சிலை
ஓராயிரம் வேண்டுதல்களால்
சில்லுகளாக சிதறுகிறது
யாரோ ஒருவனுக்கான வழித்தடமாக
மாறும் யுகத்திற்கான தவத்தில்
வளரத்துவங்குகிறது புற்று

கவிதை இரண்டு
*******
நெடுங்காலமாக இருக்கிறது
ஒரு பிச்சைப்பாத்திரம்
வந்து நிறைகிற எதுவும்
தீர்க்கவில்லை பசி
விரியும் காலமே வயிறாக
படைத்தவனை தேடுகிறான்
அலைகிறான் அவனும்
ஒரு பிச்சைப்பாத்திரத்தோடு

கவிதை ஒன்று
******
இன்றைக் கொலை செய்து
முற்றத்தில் போடுகிறவனோடு
தொடர்கிறது பயணம்
இந்தக்கரங்களில் பூத்திருக்கும்
நீலநிறப்பூக்களை
பறித்துத் பறித்துத் தருகிறான் பதிலுக்கு
வேனிற்காலம் தவிர
வேறொன்றும் அறியாதவனின்
அகக்காலம் அகலாமாகிறது
பின்னிரவில் முளைத்துக்கொள்ளும்
வரம் பெற்றவனின் பாதை
நீள்கிறது எவரையும் எதிர்பார்க்காமல்
*******