Tuesday, 12 January 2016

உங்கள் பெயர்

பேரன்பின் மிகுதி கொண்டு
ஓடி வந்து அணைத்துக் கொள்கிறீர்கள்

பேசத் தவித்த பிரியம் நா தடுமாறி நின்றிருக்க
பற்றிக் கொள்கிறீர்கள் இருகரங்களையும்

கையில் வைத்திருந்த
ஒரு ஆரஞ்சுப் பழத்தின் பாதியை
என் வசமாக்குகிறீர்கள்

இறுதி முயற்சியாய்
தெருவோரக்கடையில்
தேநீர்க்கு சொல்கிறீர்கள்

என்ன செய்தும் திருப்தியுறாத
என் மேலான உங்கள் பிரியம்
விடைபெறுகிறது ஒரு கையசைப்பில்

என் மேலமர்ந்த வண்ணத்துப்பூச்சிக்கு
உங்கள் பெயர்சூட்ட நினைக்கையில்தான் உறுத்தியது
உங்கள் பெயரை நான் கேட்கவே இல்லை